ETV Bharat / bharat

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு: இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை

பயங்கரவாதத்தை இரு நாடுகளும் இணைந்து எதிர்க்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக பிரதமர் மோடியுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 5:43 PM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் தொடர்பாக தொலைப்பேசியில் கலந்துரையாடினார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் பேசினார். இரு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் விதமாக இரு தரப்பு வணிகம், தகவல் பரிமாற்றம் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "என்னுடயை நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசியதில் மகிழ்ச்சி. அவருக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன். வரும் ஆண்டில் இந்தியா-இஸ்ரேல் நட்புறவை இன்னும் வலுப்படுத்துவது தொடர்பாக நாங்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம். மேலும், பிராந்திய சூழல் பற்றிய பார்வைகளை இருவரும் பரிமாறிக் கொண்டோம். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராடுவது என்பதை இருவரும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டோம்" என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியா-இஸ்ரேல் இடையே இருதரப்பு உறவில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் பெரிய அளவில் எதிர்வினையாற்றிய நிலையில், இந்தியா நெதன்யாகு அரசிற்கு தனது முழு ஆதரவை வழங்கியது. மேலும், மத்திய வர்த்தக மற்றும் தொழிலதுறை அமைச்சர் பியூஷ் கோயல் நவம்பரில் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் உயர்மட்ட ஆலோசனைகளையும் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜெருசலேமில் இஸ்ரேல் பிரமதர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தொழில்நுட்பம், பொருளாதாரம், திறன்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பிரதமர் மோடி, நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார். பயங்கரவாதத்தை இருந நாடுகளும் இணைந்து எதிர்க்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் அப்போது ஆலோசனை மேற்கொண்டு இருந்தனர். ஒருமாத இடைவெளியில் தற்போது இரு தலைவர்களும் மீண்டும் தொலைபேசியில் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியா வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.