‘பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அழைத்து பிரதமர் மோடி வலியுறுத்தல்
போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர பெஞ்சமின் நெதன்யாகுவைக் கேட்டுக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Published : March 2, 2026 at 11:05 AM IST
டெல்லி: மேற்கு ஆசியாவில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், போர் பதற்றத்தை குறைக்க தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைப்பேசியில் அழைத்து பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சற்றும் எதிர்பாராத சூழலில், கடந்த சனிக்கிழமை (பிப்.28) ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில், சுமார் 150 பள்ளிக் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில், சவுதி அரேபியா, துபாய், ஓமன், அபுதாபி போன்ற நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இதனால் இந்த நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் உறவினர்கள் கடும் பதற்றத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து பேசியதாக அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “தற்போது, அங்கிருக்கும் சூழலை அறிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இருநாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அங்கிருக்கும் இந்தியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும்படி வலியுறுத்தினேன்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அவசர ஆலோசனை
ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர், நேற்றைய தினம் இந்திய உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
| இதையும் படிங்க: வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை - கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதால் பதற்றம் |
குறிப்பிடும்படி, பிப்ரவரி 26 அன்று தான் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார். அவரது, இந்த 2 நாள் பயணத்தில் 17 ஒப்பந்தங்களும், 10 அறிவிப்புகளும் கையெழுத்தாகின என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிததிருந்தது.

