17 ஒப்பந்தங்களுடன் முடிந்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்: என்னென்ன சிறப்புகள்?
இஸ்ரேலில் விவசாயம் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய இந்திய மாணவர்களுக்கு, 20 புதிய உதவித்தொகைகள் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.

Published : February 27, 2026 at 8:40 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் இஸ்ரேல் பயணத்தின் பலனாக, 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, கலாச்சாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உத்திகள் போன்ற துறைகள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரதமர் மோடியின் 2 நாள்கள் இஸ்ரேன் பயணத்தின் பலனாக 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும், மக்களின் நலன்களுக்காக இருநாட்டுகளும் இணைந்து 10 முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பிரதமர் மோடி வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் மத்திய கிழக்கில் அமைதி நிலவுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், காசாவில் உள்ள பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண இந்தியா முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட திட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியா-இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் கூட்டு ஒப்பந்தங்களின் முக்கிய பகுதிகள் இவை;
- டிஜிட்டல் பணப் பரிமாற்றம்: இஸ்ரேலில் யுபிஐ சேவை செயல்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்பிசிஐ) சர்வதேச தளத்துடன், இஸ்ரேலின் MASAV இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையிலான எளிதான பணப் பரிமாற்றங்களை அனுமதிக்கிறது.
- விவசாயம்: விவசாய உற்பத்தி, விவசாயப் பொருள்களை பாதுகாப்பது தொடர்பாக செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த இந்தியா-இஸ்ரேல் சார்பாக புதுமை வேளாண் மையம் (IINCA) உருவாக்கப்படுகிறது.
- செயற்கை நுண்ணறிவு: இருநாடுகளின் பாதுகாப்புக்காகவும், மேம்பாட்டுக்காகவும் செயற்கை நுண்ணறிவைப் பலப்படுத்த புதிய மையங்களை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- சைபர் குற்றங்கள்: இந்தியாவில் ஒரு சைபர் சிறப்பு மையத்தை உருவாக்குவதற்கும் இருநாடுகள் இடையே ஒப்பந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- தொழிலாளர் இயக்கம்: கட்டுமானம், உற்பத்தி, விருந்தோம்பல் போன்ற துறைகளில் ஐந்து ஆண்டுகளில் 50,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
- இயற்கை வளங்கள்: இஸ்ரேலிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கனிமங்களைக் கண்டறிய புவி இயற்பியல் ஆய்வில் இருநாடுகளும் ஒத்துழைப்பை வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அறிவிப்புகள்
வணிகத்தை மேம்படுத்துவதற்காக ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதேபோல, செமிகண்டக்டர்கள் போன்ற எதிர்கால தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தலைமையிலான ஒரு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இஸ்ரேலிய தொடக்க நிறுவனங்கள் கையாளும் தொழில்நுட்பத்தை இணைக்கவும், அதனை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் ஒரு புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் விவசாயம் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய இந்திய மாணவர்களுக்கு 20 புதிய உதவித்தொகைகள் வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

