ETV Bharat / bharat

ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள்; பிரதமர் மோடி, அமித் ஷா புகழாரம்

ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜெயலலிதா - கோப்புப்படம்
ஜெயலலிதா - கோப்புப்படம் (@AIADMKOfficial)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 10:07 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் கொண்டிருந்த ஜெயலலிதாவுடனான உரையாடல்களை மகிழ்ச்சியோடு நினைவுகூர்வதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, எக்ஸ் தள பக்கத்தில், “ஜெயலலிதாவை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு; மருத்துவமனை விரைந்த முதலமைச்சர்

அவரைப் பற்றி இந்த மாத 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் தான் பேசியது குறித்த வீடியோ ஒன்றையும் இந்த பதிவில் இணைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள்.

ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்.

பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்” என்று குறிப்பிடுள்ளார்.

முன்னதாக, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும் ஜெயலலிதா குறித்து மோடி பேசியிருந்தார். அதில், “நம் தேசத்தில் சமூக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபட்டவர்கள். எப்போதும் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறார்கள். அவர்களில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒருவர். நான் தமிழகம் செல்லும் போதெல்லாம் மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பை கண்டு வருகிறேன்.

அவர் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போது தாய்மார்கள், மகளிர் நலனுக்காக பல பாராட்டத்தக்க நல திட்டங்கள் மற்றும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொரு உரையாடலும் என் மனதில் இன்றும் நிழலாடுகிறது. அவரது சிந்தனை மிக தெளிவானதாக இருக்கும். இது அவரிடம் மட்டுமே உள்ள சிறப்பான விஷயமாகும்” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.