ETV Bharat / bharat

ஒடிசாவில் சிறிய ரக விமானம் விபத்து: காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்

விமான விபத்தில் சிக்கி காயமடைந்த 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான சார்ட்டர் விமானம்
விபத்துக்குள்ளான சார்ட்டர் விமானம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 4:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புவனேஷ்வர்: ஒடிசாவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலா விமான ஓடுதளத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 4 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர். விமானம் ரூர்கேலாவில் இருந்து புவனேஷ்வருக்கு சென்ற போது விபத்து நிகழ்ந்தது. விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்தை தடுக்க நுரையுடன் தண்ணீரை அடிக்கும் தீயணைப்பு வீரர்கள்
தீ விபத்தை தடுக்க நுரையுடன் தண்ணீரை அடிக்கும் தீயணைப்பு வீரர்கள் (ETV Bharat)

இது தொடர்பாக ஒடிசா முதல்வர் மோகன் மாஞ்சி, எக்ஸ் பக்கத்தில், "ரூர்கேலாவில் நடந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். ஜெகநாத பெருமானின் அருளால் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பாக உள்ளனர் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளேன். விபத்து குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

ஒடிசா வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி.ஜெனா கூறுகையில், "ரூர்கேலாவில் இருந்து புவனேஷ்வருக்கு ஆறு பேருடன் சென்ற சார்லி-208 என்ற ஒன்பது இருக்கைகள் கொண்ட தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் ரூர்கேலாவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் நிகழ்ந்தது. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது" என்றார்.

விமானத்தில் பயணித்த பயணி
விமானத்தில் பயணித்த பயணி (ETV Bharat)

இது தொடர்பாக புவனேஷ்வர் விமான நிலைய இயக்குநர் பிரசன்ன பிரதான் கூறுகையில், "காயமடைந்தவர்கள் சுஷாந்த் குமார் பிஸ்வால், அனிதா சாஹு, சுனில் அகல்வால் மற்றும் சபிதா அகர்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த விமான பணியாளர்களில் கேப்டன் நவீன் கடங்கா மற்றும் கேப்டன் தருண் ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் அடங்குவர்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு அதிகாரி ரமேஷ் சந்திர மாஜி கூறுகையில், "ரூர்கேலா அருகே கன்சார் என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானத்திற்குள் சிலர் சிக்கி இருப்பதாகவும் மதியம் எங்களுக்கு தகவல் வந்தது. அதன் அடைப்படையில் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டோம். உள்ளூர் மக்கள் விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்க பெரிதும் உதவினார்கள். அவர்கள் இல்லை என்றால், எங்களால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து மீட்டிருக்க முடியாது.

விமானத்தில் இருந்து பயணிகள் மீட்கப்பட்ட பிறகு, விமானத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை தீயணைப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஜே.பி மருத்துவமனை மற்றும் ஆர்ஜிஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்றார்.