ETV Bharat / bharat

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதா? நியூயார்க் மேயர் மம்தானிக்கு பாஜக கண்டனம்

நாட்டின் இறையாண்மைக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் 140 கோடி இந்தியர்களும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அணி திரள்வார்கள் என பாஜக செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறினார்.

கவுரவ் பாட்டியா - கோப்புப்படம்
கவுரவ் பாட்டியா - கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 10:04 AM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: இந்தியாவின் உள் விவகாரங்களில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி தலையிடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அதில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கைது செய்யப்பட்ட உமர் காலித், டெல்லி திஹார் சிறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 4-ந் தேதி நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானி நேற்று முன் தினம் பதவியேற்றார். இந்த நிலையில், டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்திற்கு அவர் எழுதிய கடிதத்தை, உமர் காலித்தின் மனைவி பனோஜ் யோத்ஸ்னா லஹிரி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். உமர் காலித்திற்கு, மம்தானி கைப்பட எழுதிய அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்து விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று எழுதியுள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, இந்தியாவின் உள் விவகாரங்களில் நியூயார்க் மேயர் தலையிடுவதாக குற்றம்சாட்டினார். இது போன்ற செயல்களை இந்தியா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய பாட்டியா, "நாட்டின் இறையாண்மைக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் 140 கோடி இந்தியர்களும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அணி திரள்வார்கள். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய கவுரவ் பாட்டியா, "எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் மற்றும் எதிரிகளுடன் சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவுக்கு எதிரான அவதூறான தகவல்களை அவர்கள் பரப்ப ராகுல் காந்தி ஊக்கமளிக்கிறார்" என்றும் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, உமர் காலித்திற்கு மம்தானி கடிதம் எழுதியதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருந்தது.