மனைவி உணவு சமைத்து கொடுக்காததெல்லாம் கொடுமை என சொல்ல முடியாது - கணவனின் விவாகரத்து மனுவை நிராகரித்த நீதிமன்றம்
மனைவி உணவு சமைத்து தரவில்லை என்பதையெல்லாம் விவாகரத்து வழங்க காரணமாக கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published : January 7, 2026 at 5:01 PM IST
ஹைதராபாத்: கணவனும், மனைவியும் பணிக்குச் செல்பவர்களாக உள்ள நிலையில், மனைவி கணவனுக்கு உணவு சமைத்து கொடுக்கவில்லை என்பது ஒன்றும் கொடூர குற்றமல்ல என்று தெரிவித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், இந்த காரணத்துக்காக எல்லாம் விவாகரத்து வழங்க இயலாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான எல்.பி.நகரைச் சேர்ந்த ஒரு நபர், கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமது திருமண வாழ்க்கையில் மனைவியால் தான் நிறைய கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தக் கொடுமைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு தங்களின் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் அந்த நபர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "மனுதாரர் தினமும் மதியம் 1 மணிக்கு அலுவலகத்திற்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதே சமயம் தினமும் காலை 9 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது அவரது மனைவியின் வழக்கமாக இருந்துள்ளது. எனவே, அவர் காலை உணவு சமைக்கவில்லை என்பதை கொடுமையாக எடுத்துக் கொள்ள இயலாது" என்று நீதிபதிகள் மௌஷிமி பட்டாச்சார்யா, நாகேஷ் பீமாபக்கா ஆகியோர் அடங்கிய அமர்வு சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது தெரிவி்த்தது.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதி, 2018 இல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் இடையே சண்டையும் சச்சரவுமான இருந்து வந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டு வேலைகளில் உதவாமல் மனைவி தமக்கு கொடுமை இழைத்து வந்ததாகக் கூறி, கணவர் 2019-இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க:'ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றும் ஐபிஎல் மேட்ச் கிடையாது' - நீதிபதிகள் கருத்து
அத்துடன், தங்களின் ஒராண்டு ஒன்பது மாத கால திருமண வாழ்க்கையில் தன் மனைவி அடிக்கடி பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுவதாக மனுதாரரான அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், மனைவி தன்னுடன் ஐந்து மாதங்கள் குடும்பம் நடத்தியதாக ஒருமுறையும், மற்றொரு முறை மூன்று மாதங்கள் தன்னுடன் இருந்ததாகவும் மனுதாரர் முரண்பட்ட தகவல்களை வாக்குமூலமாக அளித்திருந்ததையும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
கருச்சிதைவுக்குப் பிறகு, பெண் தமது பெற்றோர் வீட்டில் தங்குவதைக் கொடுமையாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அதே சமயம் தனிக்குடித்தனம் கோருவது கொடுமையின்கீழ் வரும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்தது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுப்படுத்தினர்.
இந்த வழக்கில் மனுதாரரின் மனைவி, தாமாக முன்வந்து பிரிந்து செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அவரது வழக்கறிஞரின் அறிவுறுத்தலின்படியே அவர் அவ்வாறு கோரியுள்ளார். எனவே இதையும் கொடுமையாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.
மொத்தத்தில், திருமண வாழ்க்கையில் தாம் பல கொடுமைகளை அனுபவித்து விட்டதாக மனுதாரர் இங்கு குறிப்பிட்டுள்ள காரணங்கள் மட்டும் கருத்தில் கொண்டு விவாகரத்து வழங்க இயலாது என்று கூறிய நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

