கருத்துக்கணிப்புகளை தகர்த்தெறிந்த 'பெண்கள் சக்தி'... பீகார் தேர்தல் சொல்லும் சேதி என்ன?
பீகாரில் என்டிஏ கூட்டணியின் வெற்றிக்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரின், பெண்களை மையமாகக் கொண்ட கொள்கைகளும், பல்வேறு நலத்திட்டங்களும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

Published : November 14, 2025 at 7:47 PM IST
பாட்னா: ''பீகாரில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்றால் சீரான குழாய் நீர் விநியோகம், 24 மணி நேர மின்சாரம், கிராமங்களை ஒன்றோடொன்று இணைக்கும் சாலைகள், மக்கள், குறிப்பாக பெண்கள், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவதைக் காண்பீர்கள். இந்தக் கருத்துக்கணிப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் பாடம் கற்ப்பித்துள்ளது.'' என்கின்றனர்.
பீகார் தேர்தல் பரபரப்பில் தொடங்கி வியப்பில் நிறைவடைந்துள்ளது. கருத்துக்கணிப்புகளை மாற்றிய முடிவுகள், முன்னெப்போதுமில்லாத அளவிற்கு பதிவான பெண்களின் வாக்குகள் என பீகார் தேர்தலில் 'ட்விஸ்ட் அண்ட் டர்ன்' அம்சங்கள் நிறையவே உள்ளன. கூடவே, நிதிஷ் குமார் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த தேர்தலும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேர்தல்களில் பெண்களின் வாக்குகள் எத்தகைய சக்தி படைத்தது என்பதையும் இத்தேர்தல் உணர்த்தியுள்ளது. அத்துடன், என்டிஏ கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் நிலை நிலவுகிறது.
இதற்கிடையே, பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள் கவனம் பெற்றன. குறிப்பாக, முதல்வர் நிதிஷ் குமாரின் புகைப்படம் தாங்கிய அந்த பேனரில், "டைகர் அபி ஜிந்தா ஹை" என இந்தியில் உள்ள அந்த வாசகம் தேர்தல் முடிவுக்கு அப்படியே ஒத்துப்போகிறது. அதன் தமிழ் அர்த்தம் ''புலி இன்னும் உயிருடன் உள்ளது''.
2014 - 2015-க்கு இடைப்பட்ட 9 மாதங்கள் தவிர, கடந்த 2005 முதல் நிதிஷ் குமார் பீகார் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நிதிஷ் குமார் மீது பல்வேறு அரசியல் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ''ஜே.டி.யு., தலைவர் முதலமைச்சராக செயல்பட இயலாதவர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்' என்றெல்லாம் அவதூறுகள் அள்ளிவீசப்பட்டன. அதையெல்லாம் தகர்த்தெறிந்து அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க இருக்கிறார் நிதிஷ் குமார். என்டிஏ கூட்டணியின் இந்த வெற்றிக்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரின், பெண்களை மையமாகக் கொண்ட கொள்கைகளும், பல்வேறு நலத்திட்டங்களும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலமைச்சர் நிதிஷ் குமார் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் 35 சதவீத இடஒதுக்கீடு, உயர்கல்விக்கான உதவித்தொகை, மாணவிகளுக்கு பள்ளி உடைகள், மிதிவண்டிகள் ஆகியவற்றை அவரது அரசு வழங்கி வருகிறது.
மேலும், பெண்களுக்கான கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 'ஜீவிகா' சுயஉதவி குழுக்களைத் தொடங்கினார். கடந்த சில மாதங்களில் சுமார் 1.4 கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.10,000 வழங்கினார், மேலும், பயனாளிகள் சிறப்பாகச் செயல்பட்டால் ரூ.2 லட்சம் வரை வழங்குவதாகவும் உறுதியளித்தார். மிக முக்கியமாக, மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி பெண்கள் மத்தியில் நிதிஷ் குமார் நன்மதிப்பை பெற்றார்.
| இதையும் படிங்க: படுதோல்வி அடைந்த காங்கிரஸ்... பெரியண்ணன் மனப்பான்மை காரணமா? பீகார் களம் சொல்வது என்ன? |
பீகாரில் 1990 முதல் 2005 வரை ஆர்ஜேடி ஆட்சியின்போது நிலவிய சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளை நினைவுகூரும் பெண்கள், நிதிஷ் குமாரின் ஆட்சியால் கடந்த கால 'காட்டு ராஜ்ஜியம்' ஒழிந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள மாதோபூர் கிராமத்தில் வசிக்கும் வீணா தேவி என்ற பெண்மணி கூறுகையில், "பீகாரில் மீண்டும் ஆர்ஜேடி ஆட்சியும், 'காட்டு ராஜ்ஜியமும்' வரக்கூடாது என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். எங்கள் கண்களால் பல அக்கிரமத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் குரலுக்கு யாரும் கவனம் செலுத்தவில்லை. நிதிஷ் வெற்றி பெறுகிறார் என்பதில் நான் நிம்மதியடைகிறேன். அவர் அதற்கு தகுதியானவர்," என்றார்.
சமூக ஆர்வலரும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான என்.கே. சவுத்ரி கூறுகையில், '' இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இது நிதிஷின் வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது. நீங்கள் கிராமப்புறங்களுக்குச் சென்றால் குழாய் நீர் விநியோகம், 24 மணி நேர மின்சாரம், கிராமங்களை ஒன்றோடொன்று இணைக்கும் சாலைகள், மக்கள், குறிப்பாக பெண்கள், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவதைக் காண்பீர்கள். இந்தக் கருத்துக்கணிப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் பாடம் கற்ப்பித்துள்ளது.'' என தெரிவித்தார்.
நாம் முன்பே குறிப்பிட்டிருந்ததை போல இம்முறை பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வாக்கு செலுத்தியவர்களில் 62.9 சதவீதம் ஆண்கள் என்றால், சுமார் 71.8 சதவீத பெண்கள் வாக்களித்து 'கிங் மேக்கர்களாக' உருவெடுத்துள்ளனர். இரு பாலினருக்கும் இடையே 8.9 சதவீத வித்தியாசம் உள்ளது. இவர்கள் பெரும்பாலும் நிதிஷின் ஜேடியு-வுக்கும், அடுத்தபடியாக அவர் சார்ந்த என்டிஏ கூட்டணிக்கும் வாக்களித்துள்ளனர் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.

