நீட் தேர்வு விடைத்தாள்களிலும் குளறுபடி- உச்ச நீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்
டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தனது மதிப்பெண் 24 மணி நேரத்திற்குள் 3 முறை மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.

Published : August 4, 2026 at 4:54 PM IST
புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வில் தாங்களின் விடைத்தாள்களுக்கும், தேசியத் தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடைத்தாள்களுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி 6 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், தேர்வு எழுதும் போது தாங்கள் குறியிட்ட விடைகளுக்கும், பின்னர் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட OMR நகல்களுக்கும் இடையே தொடர்பே இல்லை. இதனால் தங்களின் மதிப்பெண்கள் மற்றும் மருத்துவக் கனவு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய தேர்வு முகமை முதலில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கிய போது, இந்த விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் சரியாக பதிவேற்றப்படவில்லை. முடிவுகள் வெளியான பிறகே இந்த குளறுபடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து முறையிட தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற போதும், மின்னஞ்சல் அனுப்பிய போதும், அங்குள்ள அதிகாரிகள் "உச்ச நீதிமன்றத்திற்குப் போங்கள், நாங்கள் இதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்" என அலட்சியமாக பதிலளித்ததாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவைத் தவிர, பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் நீட் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் தொடர்பாக வழக்குகள் குவிந்து வருகின்றன.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தனது மதிப்பெண் 24 மணி நேரத்திற்குள் 3 முறை மாறியதாக குறிப்பிட்டுள்ளார். முதலில் 650 ஆகக் காட்டிய மதிப்பெண், பின்னர் 500 ஆகக் குறைந்து, இறுதியாக 135 ஆக மாறியுள்ளது. இது தொடர்பான சர்வர் தரவுகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேசிய தேர்வு முகமை, சமூக ஊடகங்களில் பரவும் பல OMR தாள்கள் போலியானவை என்றும், மாணவர்கள் சிலரால் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டவை என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கான கலந்தாய்வு மற்றும் மருத்துவ இடஒதுக்கீடு நடைமுறைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு விடைத்தாள்களை மறுஆய்வு செய்யாவிட்டால், அதிக மதிப்பெண் பெற வேண்டிய தகுதியான மாணவர்கள் தங்களின் மருத்துவ இடங்களை இழக்க நேரிடும் என்பதால் இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

