ETV Bharat / bharat

8ம் வகுப்பு புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' குறித்த பாடம்: மன்னிப்பு கோரியது NCERT

அரசியலமைப்பின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ என்சிஇஆர்டி நோக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 3:22 PM IST

1 Min Read
Choose ETV Bharat

டெல்லி: சிபிஎஸ்சி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்த, ’நீதித்துறையில் ஊழல்’ என்ற பாடம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், என்சிஇஆர்டி மன்னிப்பு கோரியுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) எட்டாம் வகுப்புக்கான "Exploring Society: India and Beyond -2" என்ற புத்தகம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. 'நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு' என்ற தலைப்பில் இணைக்கப்பட்ட அந்த சமூக அறிவியல் புத்தகத்தில், 'தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' மற்றும் 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்புகளில் நீதிமன்றங்களின் படிநிலை, கட்டமைப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இடம்பெற்றிருந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், புத்தகத்தை அதன் வலைத்தளங்களிலிருந்து நீக்கிய என்சிஇஆர்டி, பாடப்புத்தகத்தின் விநியோகத்தையும் நிறுத்தி வைத்தது. மேலும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும், சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அவர், “இந்த உலகில் நீதித்துறையை அவதூறு செய்யவும், அதன் நேர்மையை சீர்குலைக்கவும் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது” என்றார்.

8ம் வகுப்பு பாடப்புத்தகம்
8ம் வகுப்பு பாடப்புத்தகம் (ANI)

அதன்படி, என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் நீதித்துறை குறித்து இடம்பெற்றுள்ள சர்ச்சை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு வினாத்தாள்களில் பிழையா? - அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

இந்நிலையில், இது தற்செயலாக நடந்த தவறு என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மன்னிப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்தும், அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நீதித்துறை மீது எங்களுக்கு உயர்ந்து மதிப்பு உள்ளது. புத்தகத்தில் உள்ள இந்த பிழை முற்றிலும் தற்செயலானது. பொருத்தமற்ற கருத்தை சேர்த்ததற்காக, என்சிஇஆர்டி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.

அரசியலமைப்பு, ஜனநாயக பங்கேற்பு போன்றவற்றை மாணவர்கள் மத்தியில் புகுத்துவதே என்சிஇஆர்டி-யின் நோக்கமே தவிர, அரசியலமைப்பின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ கிடையாது. தொடர் மறு ஆய்வு செயல்முறையின்படி, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கேட்டறிய வெளிப்படையாக உள்ளோம். இதுதொடர்பாக, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பாடப்புத்தகம் மீண்டும் எழுதப்படும். தொடர்ந்து, 2026-27 கல்வியாண்டு தொடங்குவதற்கு ஏற்ப, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும். நீதித்துறை கருத்துக்கு மீண்டும் ஒருமுறை வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.