சீனாவுடனான நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏன்? கேள்விகளை அடுக்கிய ஜெய்ராம் ரமேஷ்
கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் இந்திய வீரர்களுடன் சீன வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், சீனாவுடனான உறவில் விரிசல் விழுந்தது.

Published : January 9, 2026 at 4:50 PM IST
புதுடெல்லி: இந்திய அரசு ஒப்பந்தங்களில் ஏலம் கோர சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க பாஜக அரசு முயன்று வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு சீனா முழுமையான ஆதரவை அளித்த 8 மாதங்களுக்குப் பிறகு, இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்.சிங் சீனாவை இந்தியாவின் எதிரிகளில் ஒன்றாகவே கருத வேண்டும் என்று உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது மோடி அரசாங்கம் சீனாவுக்கு எதிரான சாதகமான அம்சத்தை முன்னெடுக்க துணிந்துள்ளது. இந்திய அரசாங்க ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் சார்பில் ஏலம் எடுக்க முடியாது என்று 5 ஆண்டு காலமாக தடை இருந்து வரும் நிலையில், அதில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது இந்தியாவில் சீன வர்த்தம் மற்றும் முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதை நோக்கமாக கொண்ட நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
சீன நிறுவனங்களை இந்தியாவின் மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய அனுமதிப்பது மற்றும் சீன தொழிலாளர்களுக்கு தாராளமாக விசா வழங்குவது போன்ற இந்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான நோக்கம், இந்தியாவில் சீன வர்த்தகம் மற்றும் முதலீடு மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்குவதாகும். இது சீனாவின் நெருக்கடிக்கு பயந்து திட்டமிட்டு சரணடைவதற்கு சமம். இதன் மிகவும் வெட்கக்கேடான உதாரணம், ஜூன் 19, 2020 அன்று மோடி சீனாவுக்கு பகிரங்கமாக வழங்கிய நற்சான்றிதழே சாட்சி. சீனா கொள்கை குறித்த தனது அரசாங்கத்தின் திடீர் நிலைப்பாட்டு மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.
மேலும், இந்திய படைகள் அருணாச்சல பிரதேச எல்லைகளில் ரோந்து செல்லும் போது தடுக்கப்படுவது, கிழக்கு லடாக்கில் சீனா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், பிரம்மபுத்திரா நதியில் மெடோக் அணையை சீனா கட்டிவரும் சூழலில், இந்த அவமாநகரமான சரணடைதல் நிகழ்கிறது. பாகிஸ்தான் இந்தியாவின் மீது நடத்திய தாக்குதல்களுக்கு சீனா தீவிரமாக ஆதரவளித்த ஒரு வருடத்திற்குள் இவை அனைத்தும் நடக்கிறது. சீனா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பிரதமரிடம் மழுப்பலான பதில்களே வருகின்றன. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சீனாவுடான இந்தியாவின் கொள்ளை குறித்த அரசாங்கத்தின் திடீர் நிலைபாடு மாற்றங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். ஏனெனில், சீனா தொடர்பான சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து மிக நீண்ட காலமாக எந்தவொரு விவாதத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பகுதியில் இந்திய படையினர் மீது சீன ராணுவ வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், சீனாவுடனான உறவில் விரிசல் விழுந்தது. இந்தியாவில் சீன நிறுவங்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசாங்கத்தின் ஒப்பந்தங்களில் ஏலம் கோர சீனாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி, ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசின் மீது சீனா தொடர்பான நிலைபாடு மாற்றம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

