ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 20 பேர் உயிரிழப்பு
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ஆதரவளிக்கும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Published : February 28, 2026 at 4:23 PM IST
காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் வெட்லாபாலம் மற்றும் ஜி.மேடப்பாடு ஆகிய கிராமங்களுக்கு இடையே அடபா நானி என்பவர் பட்டாசு உற்பத்தி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் என்று கூறப்படுகிறது.
இன்று காலை முதல்வர் அவர்கள் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற்பகலில் ஆலையில் திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்த நிலையில், அருகிலுள்ள 5 கிராமங்கள் முழுக்க புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
இந்த பட்டாசு ஆலையானது வயல்களுக்கு இடையே அமைந்திருப்பதால் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லை. எனவே பற்றியெரிந்த தீயை அணைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து அப்பகுதி கிராம மக்கள், பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்ததாகவும் கூறியுள்ளனர். இருப்பினும் கரும்புகைக்கு நடுவே வெடி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உள்ளூர் மக்கள் சென்று பார்த்தபோது பலரின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.
பயங்கர வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேரை உள்ளூர்வாசிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு வேதனை
காக்கிநாடாவில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். வெடி விபத்து சம்பவம் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கியதும், உடனடியான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதாவை சென்று பார்வையிடுமாறு அனுப்பியுள்ளார்.
தற்போது விஜய்நகர மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, இந்த விபத்தானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், விபத்தில் பலர் உயிரிழந்தது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ஆதரவளிக்கும் என்றும், அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

