ETV Bharat / bharat

மார்கதர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரணுக்கு மகளிர் தலைமைத்துவ விருது

தற்போதைய உலகளாவிய தேவைகளுக்கு ஏற்பவும் கல்வி நிறுவனங்கள் தங்களை தொடர்ந்து மாற்றிக்கொள்ள வேண்டும் என சைலஜா கிரண் குறிப்பிட்டார்.

மார்கதர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண்
மார்கதர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 10:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

பெங்களூரு: மார்கதர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரணுக்கு, 'பேராசிரியர் ஜே. ஃபிலிப் மகளிர் தலைமைத்துவ விருது' (Professor J. Philip Women Leadership Award) வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

சைலஜா கிரண் தொழில் ரீதியான சாதனைகளை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மேலாண்மை பள்ளிகளின் சங்கத்தின் (AIMS) 37-வது நிறுவன தின விழா, பெங்களூரு XIME கல்வி நிறுவனத்தில் இன்று (ஆக.29) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சைலஜா கிரக்கு மேற்குறிப்பிட்ட விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சைலஜா கிரண் பேசியதாவது, "பேராசிரியர் ஜே. பிலிப் என்ற பெயரை தாங்கிய இந்த விருது, எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திறமை, நற்பண்பு, இரக்கம் ஆகியவற்றைக் கொண்ட தலைவர்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று விரும்பியவர் அவர்.

புத்தகங்களை தாண்டிய கல்வி வேண்டும்

செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றால் உலகம் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், மேலாண்மைக் கல்வி இருக்க வேண்டும். வழக்கமான வகுப்பறைகள் மற்றும் பாடப்புத்தகங்களை தாண்டிய கல்வியாக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களின் கடந்த கால சாதனைகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. தற்போதைய உலகளாவிய தேவைகளுக்கு ஏற்பவும் கல்வி நிறுவனங்கள் தங்களை தொடர்ந்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: மார்கதர்சி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பும் -மெய்யாகிய ராமோஜி ராவின் தொலைநோக்கு பார்வையும்

'மனித மாண்புகளை வலுப்படுத்துங்கள்'

தொழில்நுட்பம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை பதிலீடு செய்பவையாக இருக்கக்கூடாது. மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் அதே நேரத்தில், பரிவு, நேர்மை, பொறுப்புணர்வு போன்ற மாண்புகளையும் வலுப்படுத்த வேண்டும்.

'30-வது வயதில் நிர்வாக இயக்குநரானேன்'

எனது 30-வது வயதில், 12 கிளைகளுடன் ரூ.100 கோடி வர்த்தகத்தைக் கொண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றேன். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பார்க்க தலைவர்களுக்கு கற்பனைத் திறன் உதவுகிறது. மற்றவர்களுக்கோ, ஒரு வரம்போடு நிறுத்திக்கொள்ள மட்டுமே அது பயன்படுகிறது.

நெறிமுறையுடன் கூடிய முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள், புதுமையான சிந்தனையாளர்கள், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்கள், தொழில்முனைவோர் ஆகியோரை உருவாக்குவதே மேலாண்மைக் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். அவர்களை உருவாக்கும் பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கே உள்ளது.

கேள்விக்குள்ளாக்கும் துணிச்சல் தேவை

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை என்பது ஒரு பதவியை வகிப்பதை மட்டும் குறிக்காது. மாறாக, சாத்தியக்கூறுகளை அடையாளம் காணும் துணிச்சல், நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கும் தைரியம், எதிர்கால சவால்களை கணித்து, அதற்கேற்ப செயல்படும் திறன் ஆகியவை அதற்கு அவசியம்.

இன்றைக்கு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்கள் எளிதில் கிடைத்து விடுகின்றன. ஆகவே, அவர்களுக்கு எவ்வாறு சிந்திப்பது, பகுப்பாய்வு செய்வது, கேள்வி எழுப்புவது, புதுமைகளை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதிகரித்து வரும் பேரிடர்களுக்கு மத்தியில், நம் பூமியை பாதுகாப்பதற்கான மேம்பட்ட ஆய்வுகளை அதிகரிக்க செய்ய வேண்டும்.

ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சி

சாதாரண யோசனைகளை கூட, சமூகத்துக்கு பயனளிக்கும் விஷயமாக மாற்றி, பெரு நிறுவனங்களை உருவாக்கும் அளவுக்கு நம் இளைஞர்கள் மாறி இருக்கிறார்கள். இந்தியாவில் ஸ்டார்ட் அப் துறையின் வளர்ச்சி இதைதான் காட்டுகிறது" என சைலஜா கிரண் கூறினார்.

தலைமைத்துவக்கான அளவுகோள்

தொடர்ந்து பேசிய அவர், “நெறிமுறைகள் இல்லாத வெற்றி நீண்ட காலம் நிலைக்காது. நேர்மைதான் நம்பிக்கையை உருவாக்குகிறது; நம்பிக்கைதான் உறவுகளை உருவாக்குகிறது; உறவுகள்தான் நிறுவனங்களையும், நாடுகளையும் முன்னேற்றுகின்றன.

ஒரு தலைவரின் கீழ் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள் என்பதை கொண்டு தலைமைத்துவம் அளவிடப்படுவதில்லை. மாறாக, அவரால் எத்தனை பேர் வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதுதான் அளவுகோல்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இளம் கண்டுபிடிப்பாளர்களான ஓம்கர் சிங் பத்ரா, சாம் சங்கி, அத்வைத் தாக்கூர் ஆகியோரை சுட்டிக்காட்டிய அவர், தொழில்முனைவில் துணிவு, விடாமுயற்சி மற்றும் படைப்பாற்றல் ஆகியவை முக்கியமானவை எனக் கூறினார்.

நிலக்கரியில் இயங்கும் இஸ்திரி பெட்டிகளைப் பயன்படுத்தும் சலவைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளை கருத்தில்கொண்டு, சூரிய சக்தியில் இயங்கும் நடமாடும் இஸ்திரி வாகனத்தை உருவாக்கிய வினிஷா உமாசங்கரையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) செயற்குழுத் தலைவர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ், சாந்திரா குழுமம் மற்றும் GRG அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் நிறுவன அறங்காவலருமான நந்தினி ரங்கசாமி, CII உலகளாவிய தலைமைத்துவ கவுன்சில் மற்றும் CII உயர்கல்வி கவுன்சிலின் இணைத் தலைவருமான நந்தினி ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.