ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புதிய உச்சமாக 89.83% வாக்குப்பதிவு

புதுச்சேரி தேர்தல் வாக்குப்பதிவு நேரலை
புதுச்சேரி தேர்தல் வாக்குப்பதிவு நேரலை (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 9, 2026 at 7:10 AM IST

Choose ETV Bharat

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ), திமுக, காங்கிரஸ், விசிக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே அங்கு நேரடி போட்டி நிலவி வருகிறது.இவற்றை தவிர, நாம் தமிழர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

30 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9 லட்சத்து 50 ஆயிரத்து 630 பேர் வாக்களிக்கவுள்ளனர். அவர்களில் 5.03 லட்சம் பெண் வாக்காளர்களும், 4.4 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளனர். தேர்தலுக்காக புதுச்சேரி முழுவதும் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, இன்று புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை கடுமையான போட்டி நிலவி வருகிறது. இளைஞர்களின் பெரும் ஆதரவுடன் விஜய்யின் தவெக களமிறங்கியுள்ளதே இதற்கு காரணம்.

மேலும், தவெக களமிறக்கியுள்ள வேட்பாளர்களில் பலர் முன்னாள் எம்எல்ஏக்களாகவும் இருப்பதால் ஆளுங்கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் கடும் சவாலாக தவெக உருவாகியுள்ளது.

LIVE FEED

9:28 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புதிய உச்சமாக 89.83% வாக்குப்பதிவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 83.42% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது புதிய உச்சமாக 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 89.87 சதவீதம் பேர் வாக்குச்சாவடிக்கு சென்றும், தபால் ஓட்டு மூலம் 1.36 சதவீதம் பேரும் என மொத்தமாக 91.23 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

8:16 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரியில் 90 சதவீதத்தை நெருங்கிய வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 89.13% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்

6:24 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

5:54 PM, 9 Apr 2026 (IST)

வாக்குப்பதிவை வீடியோ பதிவிட்ட தவெக தொண்டர்; வார்னிங் கொடுத்த கலெக்டர்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தவெக தொண்டர் ஒருவர் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து,தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குச்சாவடிக்குள் மொபைல்ஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது சட்டவிரோதம் என அந்த நபருக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குப்பதிவை மொபைலில் படம்பிடித்த தவெக தொண்டர்
வாக்குப்பதிவை மொபைலில் படம்பிடித்த தவெக தொண்டர் (ETV Bharat Tamil Nadu)

5:24 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 87.35% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

4:42 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரி வாக்குப்பதிவு; 4 மணி நிலவரம்

புதுச்சேரியில் 4 மணி நிலவரப்படி 70.40% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

4:30 PM, 9 Apr 2026 (IST)

ஏனாமில் பெண் வாக்காளர்களிடம் சர்ச்சை

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் கசம்பேட்டில் வாக்களிக்க தங்களை பணம் வாங்கவும், 'கை' சைகை மூலம் தங்களது கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் காங்கிரஸ் கட்சியினர் சிலர் வற்புறுத்தியதாக பெண் வாக்காளர்கள் குற்றம்சாட்டினர்.

3:51 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2:39 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரியில் 59.60% வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், மதியம் 1.30 மணி நிலவரப்படி 59.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1:21 PM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரியில் 54.97% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 1 மணி நிலவரப்படி, 54.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1:00 PM, 9 Apr 2026 (IST)

வாக்காளர்களுக்கு விஜய் திடீர் அட்வைஸ்

புதுச்சேரி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. எனவே, வாக்காளர்கள் கடைசி நிமிடம் வரை விழிப்புடன் இருந்து, உங்கள் வாக்குகள் பதிவானதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

12:39 PM, 9 Apr 2026 (IST)

பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பதாக காங்கிரஸ் கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வந்த காங்கிரஸார் வாக்குச்சாவடிக்குள் இருந்த பாஜகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

12:21 PM, 9 Apr 2026 (IST)

வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் புகை!

காரைக்கால் தெற்கு தொகுதி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பேட்டரியை அதிகாரிகள் மாற்றினர். பின்னர் இயந்திரம் வழக்கம் போல இயங்கியதால், வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

11:33 AM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரியில் 37 விழுக்காடு வாக்குப்பதிவு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 11 மணி நிலவரப்படி, 37.01 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

10:50 AM, 9 Apr 2026 (IST)

டிரோன் கேமராவில் சிக்கிய பணப்பட்டுவாடா!

புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு டிரோன்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மணவெளி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட காட்சி டிரோன் கேமராவில் சிக்கியது. இதையடுத்து, பணம் விநியோகித்தவர்களை போலீசார் கையும் களவுமாக சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணப்பட்டுவாடா செய்தவர்களை கையும் களவுமாக பிடித்த காவலர்
பணப்பட்டுவாடா செய்தவர்களை கையும் களவுமாக பிடித்த காவலர் (ETV Bharat)

10:39 AM, 9 Apr 2026 (IST)

மக்களின் உற்சாகத்தை பொசுக்கிய வெயில்

புதுச்சேரியில் காலை 10.30 மணிக்கே வெயில் 41 டிகிரி செல்சியஸுக்கு சுட்டெரித்து வருகிறது. இதனால் காலை முதல் கூட்டமாக காணப்பட்ட பல வாக்குச்சாவடிகளில் தற்போது கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு வாக்குப்பதிவு மந்தமாகி வருகிறது.

10:11 AM, 9 Apr 2026 (IST)

வாக்கு செலுத்தினார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மன்னாதிப்பட்டு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

(null)

10:04 AM, 9 Apr 2026 (IST)

வாக்கை பதிவு செய்த துணைநிலை ஆளுநர்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு K. கைலாஷ்நாதன், சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.

9:50 AM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரியில் 17.41% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் காலை 9 மணி நிலவரப்படி 17.41 சதவீதம் வாக்குப்பதிவு. வெயில் சுட்டெரிக்கும் போதிலும் மக்கள் நீண்டவரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.

9:43 AM, 9 Apr 2026 (IST)

பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரு சக்கர வாகனத்தில் வந்து திலாஸ்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களிக்க பைக்கில் சென்ற முதலமைச்சர் ரங்கசாமி
வாக்களிக்க பைக்கில் சென்ற முதலமைச்சர் ரங்கசாமி (ETV Bharat)

9:34 AM, 9 Apr 2026 (IST)

காரைக்காலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு - ஆட்சியர் இஷிதா ராட்டி

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 36 பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு, கூடுதல் மத்திய ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான இஷிதா ராட்டி தகவல்.

9:20 AM, 9 Apr 2026 (IST)

ஏனாம் பிராந்தியத்தில் வாக்குப்பதிவு தாமதம்

வாக்காளர்களுக்கு என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து, புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது.

9:10 AM, 9 Apr 2026 (IST)

நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்: நாராயணசாமி உறுதி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வஉசி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரி மக்கள் 'இந்தியா' கூட்டணிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். எனவே, நிச்சயம் இந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வருவோம்" என்றார்.

8:52 AM, 9 Apr 2026 (IST)

பாகூர் பகுதியில் சலசலப்பு

பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகத்தாக கூறப்படுகிறது. இவர்களை திமுகவினர் விரட்டிப் பிடிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

சிதறி கிடக்கும் டோக்கன்கள்
சிதறி கிடக்கும் டோக்கன்கள் (ETV Bharat Tamil Nadu)

8:36 AM, 9 Apr 2026 (IST)

புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த 'நிலா' ரோபோ!

புதுச்சேரியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், அங்கு ஒரு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள ரோபோ அனைவரையும் கவர்ந்துள்ளது. அங்குள்ள வஉசி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவுக்கு 'நிலா' என பெயரிடப்பட்டுள்ளது.

கையில் பூக்கள் அடங்கிய தட்டுடன் வாக்காளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு வழிகாட்டி வருகிறது இந்த ரோபோ. காலையிலேயே கனிவான குரலில் அன்போடு வரவேற்கும் இந்த ரோபோ அனைவரையும் கவர்ந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ரோபோ கொண்டு வரப்பட்டுள்ளது.

7:45 AM, 9 Apr 2026 (IST)

தேர்தல் திருவிழாவில் பங்கெடுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் உற்சாகமாக தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் இந்த தேர்தலில் தங்களின் அதிகபடியான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, இளைஞர்களும், பெண்களும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்று ஜனநாயக மாண்புகளை வலிமைப்படுத்த வேண்டும். புதுச்சேரியின் எதிர்காலத்தை கட்டமைக்க ஒவ்வொரு ஓட்டும் அவசியம்.

7:36 AM, 9 Apr 2026 (IST)

உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் காலை முதலே உற்சாகமாக நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.