ETV Bharat / bharat

விமானத்தில் 'திடீர்' என்ஜின் கோளாறு: உடனடியாக டெல்லியில் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

நடு வானில் விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்பைஸ் ஜெட் விமானம் (கோப்புப்படம்)
ஸ்பைஸ் ஜெட் விமானம் (கோப்புப்படம்) (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 11:41 AM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: டெல்லியில் இருந்து லே புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் என்ஜின் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அது டெல்லி விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதனால் 150 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Flight SG121 என்ற போயிங் 237 விமானம், இன்று (பிப்.24) காலை லடாக்கில் உள்ள லே நகரத்துக்கு புறப்பட்டது. வழக்கம் போல ஓடு பாதையில் வட்டமடித்த பின்னர், விமானம் மேலெழும்பியது.

அப்போது சில நிமிடங்களிலேயே விமான என்ஜினில் இருந்து தீப்பொறிகள் பறந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விமானக் குழுவினர் (Flight Crew), உடனடியாக இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, என்ஜின் கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி, துரிதமாக செயல்பட்டு, மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கே திரும்பினார். பின்னர், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானம் பத்திரமாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து, விமானத்தில் பயணித்த 150 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். என்ஜின் கோளாறு குறித்து ஏதும் அறியாததால், விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது ஏன்? என தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைந்தனர். பிறகு அவர்களிடம் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "தொழில்நுட்ப கோளாறு காரணமாக லே புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர். என்ஜினில் தீ வந்தது தொடர்பாக எந்தவொரு சமிக்ஞையும் விமானிகள் அறையில் தென்படவில்லை" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கியவரை கொண்டு சென்ற 'ஆம்புலன்ஸ் விமானம்' விழுந்து விபத்து: 7 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன அதிகாரிகளும், மத்திய விமானத் துறை போக்குவரத்து அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விமான என்ஜினில் என்ன கோளாறு ஏற்பட்டது? என்பதை கண்டறியும் பணியில் விமானப் பொறியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விமான தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகையில், "லே விமான நிலையம் மிகவும் உயரமான இமயமலை தொடரில் அமைந்துள்ளது. எனவே, அங்கு செல்லும் விமானங்கள் அதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் அது பின்பற்றி இருத்தல் அவசியம். ஒருவேளை, மலைகளுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தாலும், ஏதேனும் கோளாறு ஏற்பட்டதாக சமிக்ஞை கிடைத்தால் உடனடியாக புறப்பட்ட இடத்துக்கே விமானம் திரும்ப வேண்டும் என்பதே விதிமுறை" எனக் கூறினர்.

இதனிடையே, என்ஜின் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும், சமயோஜிதமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானியை விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

முன்னதாக, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்படவே, மருத்துக் கல்லூரி விடுதியில் அது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.