ETV Bharat / bharat

வெள்ளப் பாதிப்பு மீட்புப் பணியில் களமிறங்கும் நாட்டின் முதல் 'மூன்றாம் பாலினத்தவர்கள் குழு'

சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களாக கருதப்படும் மூன்றாம் பாலினத்தவர்களை பேரிடர் மீட்புப் போன்ற சவாலான பணிகளில் ஈடுபடுத்தி சுயசார்பு வாழ்க்கைக்கு வழிவகுத்துள்ள மகாராஷ்டிர அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

களத்தில் இறங்க தயார் நிலையில் உள்ள 'மூன்றாம் பாலினத்தவர்கள் பேரிடர் மீட்புக் குழு'
களத்தில் இறங்க தயார் நிலையில் உள்ள 'மூன்றாம் பாலினத்தவர்கள் பேரிடர் மீட்புக் குழு' (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 6:42 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கோலாப்பூர்: வெள்ளப் பாதிப்பு காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக முழுக்க முழுக்க மூன்றாம் பாலினத்தவர்களை கொண்ட சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழு மகாராஷ்டிராவில் தயார் நிலையில் உள்ளது.

சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களாக கருதப்படும் மூன்றாம் பாலினத்தவர்களை பேரிடர் மீட்புப் போன்ற சவாலான பணிகளில் ஈடுபடுத்தி சுயசார்பு வாழ்க்கைக்கு வழிவகுத்துள்ள மகாராஷ்டிர அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கோலாப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட 10 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்து அதிநவீன பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான தீவிர நீச்சல் பயிற்சி, நவீன மோட்டார் படகுகளை இயக்குதல் மற்றும் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் உத்திகளும் கற்றுக்தரப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி, சி.பி.ஆர் சிகிச்சை மற்றும் உயரமான கட்டடங்கள் அல்லது மரங்களில் சிக்கியவர்களை கயிறுகள் மூலம் மீட்பது போன்ற பயிற்சிகளும் இவர்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.

ஏன் கோலாப்பூர் தேர்வு செய்யப்பட்டது?

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம் ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் கடுமையான வெள்ளப் பாதிப்புகளை சந்திக்கும் ஒரு பகுதியாகும். குறிப்பாக இங்குள்ள பஞ்சகங்கா ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பஞ்சகங்கா ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததால், அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள ராஜாராம் அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் இக்குழுவினரை தற்போதே களப்பணியில் ஈடுபடுத்த முழு அளவில் தயார்படுத்தி வைத்துள்ளனர்.

பொதுவாகப் பேரிடர் காலங்களில் தங்குமிடம் மற்றும் நிவாரண முகாம்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களையும், பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர். ஆனால், இப்போது அவர்களே மீட்புக் குழுவாக உருவெடுத்துள்ளதன் மூலம், தங்களது சமூகத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தப் பொதுமக்களுக்கும் அவர்களால் பாதுகாப்பு அரணாகத் திகழ முடியும் என இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

நவீன மீட்புக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உடைகளுடன் கோலாப்பூர் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் களமிறங்க காத்திருக்கும் இந்த இந்தியாவின் முதல் 'மூன்றாம் பாலினத்தவர்கள் பேரிடர் மீட்புக் குழு'விற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.