ETV Bharat / bharat

கேரளத்தில் முடிவுக்கு வந்த 10 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் ஆட்சி; மீண்டும் அரியணை ஏறும் காங்கிரஸ்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றது.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2026 at 9:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருவனந்தபுரம்: கேரளம் மாநிலத்தில் 10 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான ஆட்சியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

கேரள சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 2,71,42,952 வாக்காளர்களில் 76.63 சதவீதம் பேர் வாக்களித்தனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியாகின.

இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றது. இதில் இந்தியத் தேசிய காங்கிரஸ் 63 இடங்களில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 22 தொகுதிகளில், கேரள காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்றது.

அதே நேரம், ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 26 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களும் வெற்றி பெற்றன. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

10 ஆண்டு ஆட்சிக்கு முடிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தலைமையிலான 10 ஆண்டுகள் அரசை, காங்கிரஸ் கூட்டணி முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் 10 மேற்பட்ட அமைச்சர்கள் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். மிக முக்கியமாக நட்சத்திர வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சைலஜா, பேராவூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ஆறன்முளா தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

அதேநேரம், முதலமைச்சராக பதவி வகித்த பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் முதற்கட்ட சுற்றுகளில் பின்னடைவைக் கண்டு இழுபறிகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றார்.

2025 கேரளம் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்த தேர்தலில் வெற்றிக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது. அதே போன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்விக்கு, ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி மற்றும் வேலையின்மை காரணமாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கேரளாவின் தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வெற்றி

காங்கிரஸ் முதலமைச்சர் யார்?

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, முதலமைச்சர் பிரனாயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணியில் இருந்து யார் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் என இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீஸ் அல்லது மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சென்னிதாலா அல்லது மூத்த தலைவரும், எம்.பியுமான கே.சி.வேணுகோபால் ஆகியவர்களில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.