ETV Bharat / bharat

’கேரளா ஸ்டோரி 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை - கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த வாரம் ’கேரளா ஸ்டோரி 2’ படத்தின் டிரெய்லரில் சில பெண்கள் இணைந்து ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி, மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

’கேரளா ஸ்டோரி 2’ போஸ்டர்
’கேரளா ஸ்டோரி 2’ போஸ்டர் (Film Poster)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 5:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கொச்சி (கேரளா): ’கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமாக்யா நாராயண் சிங் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. இப்படத்தில் உல்கா குப்தா, அதிதி பாட்டியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (பிப்.27) வெளியாகவிருந்த நிலையில், டிரெய்லர் கடந்த வாரம் வெளியானது. அந்த டிரெய்லரில் சில பெண்கள் இணைந்து ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி, மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படம் மதச்சார்பற்ற கேரளாவின் பிம்பத்தை பாதிக்கக்கூடும் வகையில் உள்ளதாக இப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ’கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் மத நல்லிணக்கத்திற்கு எதிராக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் எனவும், சென்சார் குழு இப்படத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ரிலீசுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் கேரளா ஸ்டோரி 2 படத்தின் டீசர் மொழிபெயர்ப்பை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும், படம் கேரளாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறதா? மாநிலத்தின் மதச்சார்பற்ற பிம்பத்தை பாதிக்கிறதா? என மத்திய சென்சார் குழு கவனமாக ஆராய வேண்டும் என கேரளா நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர் நல்லகண்ணு - ரஜினி புகழாரம்

அதே நேரம் நேரக் கட்டுப்பாடு காரணமாக நீதிமன்றம் படத்தை பார்க்க வேண்டும் என்ற படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பு வாதத்தை நிராகரித்தது. படத்திற்கு சான்றிதழ் வழங்குவது சென்சார் குழுவின் பொறுப்பு என்றும், இப்படம் மறு தணிக்கை செய்யும் அளவு தீவிரமான பிரச்சனைகளை கொண்டுள்ளது என்றும் கேரளா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.