‘போராட்டத்தை குற்றமாக்குவதை நிறுத்துங்கள்’ - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்
2020 ஆம் ஆண்டு வன்முறைக்கு காரணமானவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகமும் காவல் துறையும் முன்பே நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியிருக்கிறது.

Published : January 8, 2026 at 5:59 PM IST
புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் எழுப்பிய கோஷங்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிய பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜனவரி 5, 2020 அன்று மர்ம கும்பல் ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அதன் 6-வது நினைவுதினத்தையொட்டி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து கோஷங்கள் எழுப்பிய மாணவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்திருந்தது.
இதனையடுத்து ‘போராட்டத்தை குற்றமாக்குவதை நிறுத்துங்கள்’ என்ற தலைப்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (JNUTA) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நினைவு தின கூட்டத்தில் கோஷங்களை எழுப்பியதற்காக மட்டுமே மாணவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு டெல்லி காவல் துறையிடம் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருப்பது அபத்தமான நிலைப்பாடு என்று குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் 2020 ஆம் ஆண்டு வன்முறைக்கு காரணமானவர்கள்மீது பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையும் முன்பே நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறது.
ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றமானது மறுக்க முடியாத வன்முறை செயல். இதனை டெல்லி காவல் துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் தான் தடுக்க தவறி விட்டன. வன்முறைக்கு பிறகும் அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர்.
| இதையும் படிங்க: தகவல் தொடர்பா; மக்கள் சேவைக்கா - அறிவியல் தொழில்நுட்பம் எதற்கு பயன்பட வேண்டும்? மருத்துவர் செளமியா சொல்வது இதுதான்! |
இதற்கு முன்பும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களால் மாணவர் சங்க தலைவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போதும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதை சட்டவிரோதமாக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருக்கிறது.
மேலும் போராட்டங்களை அடக்குவதை நியாயப்படுத்துவதும், ஜனநாயக நெறிமுறைகளை அழிப்பதையும் மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை அழிக்கும்படியான நடவடிக்கைகளை கடந்த 10 ஆண்டுகளாக எடுத்து வந்தாலும் இங்குள்ளவர்களின் உணர்வை அழிக்க முடியவில்லை. நிர்வாகத்தின் சர்வாதிகாரத்திற்கு இன்றும் எதிர்ப்பு எழுந்து கொண்டேதான் உள்ளது” என்று கூறப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், ஊடகங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், பல்கலைக்கழகத்தை பாதுகாக்க போராட்டத்தை தொடர வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

