இளம்பருவ காதல்களுக்கு போக்சோவில் ‘ரோமியோ - ஜூலியட்’ பிரிவு - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
சட்டங்களை பயன்படுத்தி பகைமைகளை தீர்த்துக் கொள்ள முயல்பவர்கள் மீது வழக்குத் தொடர உதவும் வகையில் வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Published : January 10, 2026 at 1:55 PM IST
டெல்லி: உண்மையான இளம் பருவ காதல்களுக்கு போக்சோவில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், ‘ரோமியோ - ஜூலியட்’ என்கிற புதிய பிரிவை அச்சட்டத்தில் அறிமுகப்படுத்துமாறு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டபட்ட ஒருவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதுடன், பாதிக்கப்பட்ட நபருக்கு வயது நிர்ணய சோதனை நடத்துமாறும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உத்தரபிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கானது நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கோடிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், போக்சோ சட்டத்தின் கீழான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது நிர்ணய சோதனை நடத்துமாறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என்று கூறியதுடன், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனையும் ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
பின்னர் போக்சோ சட்டம் குறித்து பேசிய நீதிபதிகள், “இன்றைய குழந்தைகளையும், நாளைய தலைவர்களையும் பாதுகாக்கும் முக்கிய சட்டங்களில் ஒன்று போக்சோ. ஆனால் இந்த சட்டமானது பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஒருபுறம், பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயத்தின் காரணமாக அமைதியாக இருக்கின்றனர். அவர்களின் குடும்பங்களும் வறுமை அல்லது களங்கம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. மறுபுறம், வசதி படைத்தவர்கள் இதுபோன்ற சட்டங்களை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். இது, நீதி நிச்சயமற்றத் தன்மையை காட்டுகிறது” என்றனர்.
| இதையும் படிங்க: தொடர்ந்து கிலோ ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையாகும் மல்லிகை |
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பலமுறை நீதித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பின் நகலை இந்திய அரசின் சட்ட செயலாளருக்கு அனுப்பி, சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதே சமயம், உண்மையான இளம்பருவ காதல்களுக்கு போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், ரோமியோ - ஜூலியட் என்ற பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும்.
போக்சோ சட்டத்தை பயன்படுத்தி, சொந்த பகையை தீர்த்துக்கொள்ள முயல்பவர்கள் மீது வழக்கு தொடர உதவும் வகையிலான வழிமுறைகளை கொண்டுவர வேண்டும்” என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், “உயர் நீதிமன்றங்கள் தங்கள் ஜாமின் அதிகார வரம்பை பயன்படுத்தி விசாரணைகளை விரைவில் முடிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு முரணாக நெறிமுறைகளை வெளியிடவோ முடியாது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் ஜாமின் மனுக்களை விசாரிக்கும் போது, அனைத்து வழக்குகளிலும் வயது நிர்ணய சோதனைகளை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?”என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

