ETV Bharat / bharat

வானில் நீண்டநேரம் வட்டமடித்த இண்டிகோ விமானம் - நடு வானில் விமானி செய்த மேஜிக்!

வானில் தொடர்ந்து வட்டமடித்த போதிலும், மும்பையில் வானிலை சீரடையாததால் எரிபொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, அந்த விமானம் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 5:47 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மும்பை: கடந்த இரு நாட்களுக்கு முன் மும்பையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்த இண்டிகோ விமானம் குறித்து, விமான கண்காணிப்பு வரைபடத்தில் வெளியான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிதீவிர கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மோசமான வானிலையால் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது காலதாமதமாக இயங்கப்பட்டன. குறிப்பாக சென்னை - மும்பை இடையேயான விமானங்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை தாமதத்தை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், "யூ ஸ்பின் மீ ரைட் ரவுண்ட்" என்ற பாணியில், வழக்கமான வட்டப் பாதையாக இல்லாமல் நடுவானில் வட்டமடித்த இண்டிகோ விமானத்தின் பயணப் பாதை அமைந்த விதம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜூலை 5 அன்று 6E 595 என்ற இண்டிகோ விமானம் டெல்லியில் காலை 8.30 மணிக்கு மும்பை நோக்கி புறப்பட்டது. காலை 11 மணி அளவில் மும்பை வான்பரப்பை அந்த விமானம் வந்ததது.

அப்போது மும்பையில் அதி தீவிர கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அனுமதி மறுத்தது.

இதனால் விமானி பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானத்தை வானில் சில நிமிடங்கள் வட்டமடிக்க வைத்தார். அவ்வாறு அவர் திருப்பிய பாதைகளின் ஒட்டு மொத்த வரைபடம், விமானக் கண்காணிப்பு செயலியான 'பிளைய்ட்ரேடார்24' -ல் மிக துல்லியமான பதிவாகியுள்ளது.

வானில் தொடர்ந்து வட்டமடித்த போதிலும், மும்பையில் வானிலை சீரடையாததால் எரிபொருள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அந்த விமானம் இறுதியாகப் பாதுகாப்பாக ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அந்த விமானம் ஹைதராபாத்தில் காலை 11.59 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. இண்டிகோ விமானத்தின் இந்த வட்டவடிவ பயணத்தை சிலர் இதய வடிவில் இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

விமானக் கண்காணிப்பு வரைபடத்தின் இந்த ஸ்கிரீன்ஷாட்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், "மும்பை விமான நிலையத்தின் மீதான தனது அன்பை விமானி இதய வடிவில் காட்டியுள்ளார்", "கடினமான சூழ்நிலையிலும் ஒரு அழகான கலை வடிவம்" என்று பல்வேறு சுவாரஸ்யமான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.