அமெரிக்காவிடம் இருந்து ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கும் இந்தியா
65 மீட்டர் முதல் 2.5 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்குகளைக்கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதே இந்த ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை.

Published : August 29, 2026 at 10:26 PM IST
புது டெல்லி: அமெரிக்காவிடம் இருந்து ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (Javelin anti-tank missile) வாங்க இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அவரது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முக்கிய செய்தி. போர்க்களத்தில் செயல்திறன் நிரூபிக்கப்பட்ட ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
மே 2026-இல் நடைபெற்ற ஷாங்கிரி-லா பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் சுட்டிக்காட்டியது போலவே, இந்தியாவின் இந்த முன்னெடுப்பால் இரு நாட்டுக்கு இடையிலான பாதுகாப்பு உறவு ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணும். அத்துடன், கூட்டுத் தயாரிப்புக்கான வாய்ப்புகளுக்கும் இது வழிவகுக்கும். மேலும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றும் ஒத்துழைப்பு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை என்றால் என்ன?
ஜாவெலின் என்பது எதிரி நாடுகளின் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை துல்லியமாக தாக்கி அழிக்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அதிநவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பாகும். இதனை ராணுவ வீரர்கள் தங்களின் தோளில் வைத்தோ அல்லது தாங்கு மேடை மீது வைத்தோ இயக்க முடியும். இதை இயக்குவது மிகவும் எளிது. மேலும், இலக்கை நோக்கி ஏவுகணையை ஏவிய பிறகு, அதை வீரர் வழிநடத்த வேண்டிய அவசியம் இருக்காது.
நெருப்பு வராது
ஏவுகணை குழாயில் இருந்து அழுத்தப்பட்ட வாயுவின் வாயிலாக இது வெளியேறும். ஆகையால், அது வெளியேறும்போது நெருப்பு பொறிகள் வராது. எனவே பதுங்கு குழிகள் அல்லது சிறிய மூடப்பட்ட அறைகளில் இருந்துகூட இந்த ஏவுகணையை வீரர்கள் ஏவ முடியும்.
2.5 கிமீ தூரத்தில் உள்ள இலக்கைகூட தேடி சென்று அழிக்கும்
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தேடி சென்று அழிக்கும் திறன், இந்த ஏவுகணைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏவுகணை ஏவப்பட்ட பிறகு சுமார் 150 மீட்டர் உயரம் வரை பறந்து சென்று விட்டு, பின்னர் செங்குத்தாக கவச வாகனங்கள் மீது விழுந்து அழிக்கும். தொடர்ந்து, 65 மீட்டர் முதல் 2.5 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்குகளைகூட இது துல்லியமாக தாக்கி அழிக்கும்.
இத்தகைய நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பையே அமெரிக்காவிடம் இருந்து நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியா வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹூட் மார்ட்டின் மற்றும் ஆர்டிஎக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. அத்துடன், இந்த கையடக்க ஏவுகணையை ஏற்கனவே அமெரிக்காவின் நட்பு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் 93 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 100 ஜாவலின் அமைப்பு மற்றும் 216 எக்ஸ்கேலிபர் ஆகியவற்றை இந்திய கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியிருந்தது. அத்துடன், ஏற்கனவே எம்777 ஹோவிட்சர் பீரங்கிகளில் எக்ஸ்காலிபர் வெடிமருந்துகளையும் இந்தியா பயன்படுத்தி வருகிறது.
மேலும், தரை, கடல், வான்வெளி, விண்வெளி மற்றும் இணையவெளி ஆகிய தளங்களில் பாதுகாப்பை மேம்படுத்துகின்ற விதமான ஓர் முக்கிய ஒப்பந்தத்தில் சென்ற ஆண்டு இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டன. இந்த சூழலிலேயே அமெரிக்காவிடம் இருந்து ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான திட்டத்தில் இந்தியா களமிறங்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

