ஹிஜாப் அணிந்திருந்தால் நகை கிடையாது; விரைவில் நாடு முழுவதும் அமல்? பீகாரில் நகைக்கடை உரிமையாளர்கள் முடிவு
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு முஸ்லிம் பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை அகற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் கண்டனத்திற்குள்ளானது.

Published : January 7, 2026 at 5:18 PM IST
பாட்னா: ஹிஜாப் உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளை அணிந்து வருபவர்களுக்கு பீகாரில் உள்ள நகைக்கடைகளில் அனுமதியில்லை என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப், நிக்காப், பாராம்பரிய துண்டு அல்லது வேறு ஏதேனும் பொருட்களை கொண்டு முகத்தை முழுவதுமாக மூடியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்யப்படாது என்றும், நகைக்கடைக்குள் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் பீகாரை சேர்ந்த அகில இந்திய நகைக்கடை மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பு (AIJGF) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக AIJGF தேசியத் தலைவர் பங்கஜ் அரோரா ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, "பாதுகாப்பு காரணங்களுக்காக பீகாரில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். குற்றவாளிகள் தங்களது முகத்தை மூடிக்கொண்டு வந்து, நகைக்கடைகளை கொள்ளையடித்து தப்பி விடுகிறார்கள். கடைகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதிலும் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதில் எவ்வித மதரீதியான நடவடிக்கையும் அல்ல. வாடிக்கையாளர்களின் முகங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
Patna, Bihar: Bihar becomes the first state to ban hijab or niqab wearers from buying gold. Starting tomorrow, jewelry shops will deny entry and sales to customers whose faces are fully covered, as per the All India Jewelers and Gold Federation’s directive
— IANS (@ians_india) January 6, 2026
State President, All… pic.twitter.com/ycKHnbyFVY
தொடர்ந்து பேசிய அவர், "கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை நாட்டின் மற்ற பகுதிகளிலும் அமல்படுத்துவது குறித்து கூட்டமைப்பு பரிசீலித்து வருகிறோம். நகைக்கடைக்கு வருபவர்கள் தங்கள் முகத்தை மூடியிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் ஸ்டிக்கர்களை கடைகளின் நுழைவாயிலில் ஒட்டுவோம். இது முஸ்லிம்களை நோக்கியது அல்ல. இந்துக்கள் கூட முகத்தை முகமூடி, கம்ச்சா போன்றவன்றை பயன்படுத்தி மூடுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக AIJGF கூட்டமைப்பின் பீகார் மாநில தலைவர் அசோக் குமார் வர்மா கூறும் போது, "பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நகை மதிப்பு மிக்க பொருளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.40 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. எனவே, நகைக்கடை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் தங்க நகைகளை இழந்தாலே அது அவர்களுக்கு பேரிழப்பாக மாறும். அதுவும் சமீபகாலமாக நகைக்கடைகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் தங்கள் முகங்களை மறைத்து வரும் போது தான் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடக்கிறது.
#WATCH | Jhansi, Uttar Pradesh: To prevent theft incidents amidst rising gold and silver prices, jewellers in the Sipri Bazaar area have pasted notices stating that they will not allow people with covered faces in the shop.
— ANI (@ANI) January 5, 2026
Uday Soni, President, Sarafa Sipri Bazaar, Jhansi,… pic.twitter.com/ZKeCR2YFo4
திருட வருபவர்கள் ஹெல்மேட் அல்லது முகத்திரைகளை அணிந்து கொண்டு மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக வந்து கொள்ளை அடிக்கிறார்கள். பல மாநிலங்களில் பர்தா அணிந்த கொள்ளையர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதும், கடைக்காரர்களை அவர்கள் துப்பாக்கியால் சுடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது போன்ற குற்றச்செயல்களை தடுக்கவே இந்த நடைமுறைகளை கொண்டு வந்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முகத்திரையை அகற்றுவது எங்கள் நோக்கம் அல்ல, மாறாக ஹிஜாப் அல்லது பர்தா அணிந்து வரும் வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதற்கு முன்பு தங்கள் முகத்தை காட்ட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மக்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம். அதே போன்று துண்டு அல்லது ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடியுள்ள ஆண்களுக்கும் நகைக்கடைக்குள் அனுமதிக்க இல்லை. இந்த விதி எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் எதிரானது இல்லை, அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்" என்றார்.
முன்னதாக, டிசம்பர் 15 ஆம் தேதி பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் போது, அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஒரு முஸ்லிம் பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை அகற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் கண்டனத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலாகி, நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது.
இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்குள், அகில இந்திய நகைக்கடை மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பு (AIJGF) இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உ.பி மாநிலம் ஜான்சியில் உள்ள கடைகளில் நகைத்திருட்டு சம்பவம் அதிகரித்ததை தொடர்ந்து, முகத்தை மூடி இருப்பவர்களுக்கு நகைக்கடைக்குள் அனுமதியில்லை என நகைக்கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹிஜாப் அணிந்தவர்களை நகைக் கடைகளுக்குள் விடக் கூடாது என்பதை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில நகைக் கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் பீகாரை சேர்ந்த அகில இந்திய நகைக்கடை மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பு (AIJGF) அறிவித்துள்ளது.

