எல்.ஜி, எவரெஸ்ட் பெருங்காயத்தூள் விற்பனைக்கு தடை - FSSAI அதிரடி உத்தரவு
தவறுகளை சரிசெய்யாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என எவரெஸ்ட் மற்றும் எல்.ஜி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published : August 30, 2026 at 9:49 AM IST
புது டெல்லி: பிரபல உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான எவரெஸ்ட் மற்றும் எல்.ஜி நிறுவனங்களின் பெருங்காயம் தரமற்றவை என கண்டறியப்பட்டதால், அவற்றை விற்பனை செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்ட அறிவிப்பில், எவரெஸ்ட் உணவுப் பொருட்கள் மற்று லால்ஜி கோதூ (எல்.ஜி) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காய தூய் தரமற்றவை மற்றும் விதிகளை மீறி உற்பத்தி செய்யப்பட்டது என்பது கண்டறியப்பட்டதால், அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் நிறுவனத்தின் பெருங்காய தூளின் அனைத்து வகையும் உணவு ஆய்வகத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டத்தில், அவை தரமற்றவை என்பதும், தவறாக முத்திரையிடப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு பொருட்கள் விதிமுறைகள் 2011 அடிப்படையில் ஆல்கஹாலில் கரையும் தன்மை 5% இருக்க வேண்டும். ஆனால், இந்நிறுவனத்தின் அளவில் 0.00% சதவீதமாக பதிவாகியுள்ளது. அதே போன்று, மஞ்சள் பெருங்காய தூள் மற்றும் கருப்பு பெருங்காய தூள் ஆகியவையும் தலா 3.29% மற்றும் 4.4% பதிவாகியுள்ளது.
எல்.ஜி நிறுவனத்தின் பெருங்காயத்தைப் பொருத்தவரை, அதில் மாவு அளவுக்கு அதிகமாக இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரண்டு நிறுவனத்தின் அனைத்து வகையான பெருங்காய தூளின் விற்பனைக்கும் உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நிறுவனங்களின் இந்த முறைகேடுகளை சரி செய்து, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுகளை சரிசெய்யாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிற எச்சரிக்கை அச்சிட உத்தரவு
அதேபோன்று, அதிகளவிலான கொழுப்பு, சக்கரை மற்றும் உப்பு ஆகியவை இடம்பெற்ற உணவுப் பொருட்களின் பாக்கெட்டில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவப்பு நிற குறியீட்டை அச்சிட உத்தரவிட திட்டமிட்டுள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் பாக்கெட்டில் முகப்பு பக்கத்தில் அதில் இடம்பெற்றிக்கும் மூலப்பொருட்களுக்கு ஏற்ப எச்சரிக்கை லேபிள் கட்டாயம் இடம்பெறும் வகையில் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையில் இது குறித்து பதிலளிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சிவப்பு நிற எச்சரிக்கை குறியீட்டை வெளியிட உத்தரவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

