ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கற்க உரிமை உண்டு... இங்கு மாணவர்களே ஆசிரியர்கள் - பீகாரில் செயல்படும் பாக்கெட் மணி பள்ளி
2016ஆம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டபோது 30 குழந்தைகள் இணைந்த நிலையில், தற்போது தெருக்களில் வாழ்கிற, அங்கு விளையாடுகிற குழந்தைகளில் 800 பேர் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.

Published : February 26, 2026 at 2:05 PM IST
- By முகமது மஹ்மூத் ஆலம்
நாளந்தா: ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்றார் ஔவையார். அதேபோல்,
‘கேடில்விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என்றார் திருவள்ளுவர்.
இதுபோன்ற வரிகள் காலங்காலமாக கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. கல்வி ஒருவரை சிறந்த மனிதராக மாற்றுகிறது. கல்வியின்றி சமூகத்திலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சியை காண முடியாது. ஆனால் இத்தகைய சிறப்புமிக்க கல்வியானது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கிறதா என்றால், ‘இல்லை’ என்பதுதான் நிதர்சனம்.
வறுமை என்ற தடை பலரின் கல்வியை பறித்து விடுகிறது. பலர் அந்த தடையை உடைத்து சாதித்துள்ளனர். கல்விக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக பீகாரில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த பள்ளி சற்று தனித்துவமானது. ஏனென்றால் இங்கு மாணவர்கள் தான் ஆசிரியர்கள். கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம். வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்ல முடியாதவர்களுக்கும், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்களுக்கும் கல்வி கற்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது இப்பள்ளி.
பள்ளி திறக்கப்பட்ட கதை
2016ஆம் ஆண்டு. பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்திலுள்ள கண்டக்பர் பகுதியில் பள்ளிக்கு செல்லவேண்டிய வயதில் குழந்தைகள் தெருக்களில் விளையாடுவதையும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் கவனித்த சாந்தினி மற்றும் பிரியான்ஷி என்ற 2 மாணவிகள் இந்த குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் என்ன? என்று யோசனை செய்துள்ளனர். அந்த யோசனையை செயல்படுத்தும் விதமாக, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தோர் வசிக்கிற குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெற்றோர்களை சந்தித்து அவர்களுடைய குழந்தைகளை கல்வி கற்க அனுப்புமாறு பேசியுள்ளனர்.

முதலில் ஏழை மற்றும் ஆதரவற்ற குடும்பங்களைச் சேர்ந்த சில குழந்தைகள் மட்டும் கல்வி கற்க முன்வந்த நிலையில், ரோட்டரி கிளப்பின் உதவியுடன் அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க தொடங்கியுள்ளனர். அதே சமயத்தில் கல்வியை இழந்த குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டார் நாளந்தாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வரான பாபு டி. தாமஸ். அவருக்கு இதுகுறித்த எண்ணம் ஓடிக்கொண்டிருக்க, சில மாணவர்களிடம் இதுகுறித்து விவாதித்துள்ளார். அவர்கள் பள்ளி நேரத்திற்கு பிறகு ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஒப்புகொண்ட நிலையில் ‘பாக்கெட் மணி பள்ளி’ என்று அழைக்கப்படுகிற இலவச கல்வி பள்ளி வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.
இந்த பள்ளி ஆரம்பித்த சமயத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் மட்டுமே ஒன்று சேர்ந்து கிளப் ஒன்றை உருவாக்கி, தங்களது பாக்கெட் மணி மற்றும் பழைய பாட புத்தகங்களை கொடுத்து ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தனர். இப்போது இந்த கிளப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் தங்களது பாக்கெட் மணி மட்டுமல்லாமல், குழந்தைகளை பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச நோட் புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் பைகளையும் நன்கொடையாக வழங்குகின்றனர்.
படிப்பு என்னை கைவிடவில்லை - நுஸ்ரத்
இந்த பள்ளியிலேயே படித்து தற்போது இங்குள்ள மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வரும் நுஸ்ரத் கட்டூர் தனது அனுபவத்தை பகிர்கிறார்.
“கொரோனா காலத்தில் எனது தந்தை டெல்லியில் இறந்துவிட்டார். அந்த நேரத்தில் நான் படிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் பள்ளியை விட்டு நிற்க நினைத்தபோது பள்ளிதான் எனக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. பள்ளி முதல்வர் உதவியதால் நான் படித்து முடித்துவிட்டு, இப்போது இங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறேன்.

இங்கு கல்வி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. பாடம் நடத்த எனக்கு ரூ. 1000 சம்பளமாக வழங்கப்படுகிறது. நான் மெட்ரிகுலேஷன் தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதையடுத்து ஆசிரியர் எனக்கு ஒரு மொபைல்போனை பரிசாக அளித்தார். மாலை நேரத்தில் இங்கு தினமும் பாடம் நடத்துகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து என் அம்மா மற்றும் 2 சகோதரிகளை பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய சகோதரியும் இதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்” என்கிறார் நுஸ்ரத்.
அஞ்சலியின் அனுபவம்
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறுகிறார் 4ஆம் வகுப்பு படித்து வரும் அஞ்சலி. இவருடைய தந்தை வீட்டுக்கு வீடு சென்று மரவேலை செய்கிற ஒரு தச்சர். நான்கு குழந்தைகளில் அஞ்சலிதான் கடைசி மகள். குடும்பத்தின் வறுமை காரணமாக அவரால் அஞ்சலியை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்றாலும், படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஞ்சலி கடந்த 6 ஆண்டுகளாக இலவச பள்ளிக்கு சென்று பயின்று வருகிறார்.
"கட்டணங்கள் எதுவும் இல்லாததால் இங்கு தினமும் படிக்க வருகிறோம். இங்கே புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படுகின்றன. என் அப்பா மரவேலை செய்துவருகிறார். நான் பெரியவளானதும் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்கிறார் அஞ்சலி.

பாக்கெட் மணி பள்ளி எங்கே செயல்படுகிறது?
நாளந்தாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் இந்த பாக்கெட் மணி பள்ளி இயங்கி வருகிறது. ஏழைகளுக்காக செயல்பட்டுவரும் இந்த பள்ளியானது மாணவர்களின் ரோட்டரி கிளப் உதவியுடன் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளியின் முதல்வர் பாபு டி. தாமஸ் தனது பள்ளி வளாகத்திலேயே பாக்கெட் மணி பள்ளிக்காக சிறிய இடம் ஒன்றை ஒதுக்கியிருக்கிறார். மாணவர்களே ஆசிரியர்களாக பணியாற்றுவதால் பள்ளி நேரத்திற்கு பிறகு இந்த பள்ளி தொடங்குகிறது.
மாற்றுத்திறனாளியான சாந்தினி, இந்த பள்ளியில் பாடம் கற்பிக்கும் மாணவர்களில் ஒருவர். ஆரம்பத்தில் பட்டியலின குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று பெற்றோரை சமாதானப்படுத்தி மாணவர்களை அழைத்து வந்தவர்களில் இவரும் முக்கியமானவர். கல்வி கற்கவும், கற்பிக்கவும் உடல்நல குறைபாடு ஒரு தடையாக இருக்கவில்லை என்கிறார் சாந்தினி.
கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் பாடம் கற்பித்து வருகிறார் ஷிப்ரா. இவரும் அதே பள்ளியில் 9ஆம் வகுப்பில் பயின்று வருகிறார். அவர் கூறுகையில், “பல ஏழை குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு. எது சரி, தவறு என்பதை வேறுபடுத்தி புரிந்துகொள்ளும் அளவிற்கு குழந்தைகளுக்கு நாங்கள் கல்வி கற்பிக்க முயற்சித்து வருகிறோம்” என்கிறார்.
| இதையும் படிங்க: நீங்கள் இன்னும் சாகவில்லை - நல்லகண்ணுவின் மறைவை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி |
குழந்தைகளின் கனவை நனவாக்குகிறோம்
2016ஆம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டபோது 30 குழந்தைகள் இணைந்த நிலையில், தற்போது தெருக்களில் வாழ்கிற, அங்கு விளையாடுகிற குழந்தைகளில் 800 பேர் இந்த பள்ளியில் படிக்கின்றனர். பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாணவர்களின் பாக்கெட் மணி கிளப் உதவியுடன் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படுவதுடன், பண்டிகை காலங்களில் பட்டாசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி முதல்வர் பாபு டி. தாமஸ் கூறுகையில், “கல்வி இழந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்த ஒரு கூட்டத்தில் நான் கலந்துகொண்டபோது இதுகுறித்து மாணவர்களிடம் விவாதிக்கப்பட்டது. அவர்கள் பாடம் கற்பிக்க ஒப்புகொண்ட நிலையில் இலவச பள்ளி தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட கல்வி கற்பிக்கப்படுகிற இப்பள்ளியில் சீனியர் மாணவர்கள் ஆசிரியர்களாகவும், குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் மாணவர்களாகவும் மாறுகின்றனர். இவர்கள் இப்போது காவல்துறை அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும் ஆகவேண்டுமென கனவு காண்கிறார்கள். 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இங்கே கல்வி இலவசம்.
எந்த குழந்தையும் படிப்பறிவில்லாமல் இருக்கக்கூடாது என்பதை இலக்காகக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை அரசுப் பள்ளியிலும் சேர்த்துவிடுகிறோம். ஆரம்பத்தில் எங்கள் பள்ளி மாணவர்கள் தங்கள் பாக்கெட் மணி மற்றும் பழைய புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உதவினார்கள். ஆனால் இப்போது பெரிய மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக சேவகர்கள் தங்களது பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய விசேஷங்களை இந்த குழந்தைகளுடன் கொண்டாடி, அவர்களுக்கு புது துணிகள், பைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருட்களை பரிசாக கொடுக்கின்றனர்.
8ஆம் வகுப்புக்கு பிறகு பெண் கல்வியை தொடர்வது இங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று, அவர்களுக்கு ஆலோசனை வழங்கி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். படிப்பை முடித்தபிறகு அவர்களுக்கு ஒரு சிறிய வேலையை வாங்கித் தருவதாக உறுதியளிப்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
பாக்கெட் மணி பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் கேமிரா முன்பு பேச மறுத்துவிட்டாலும், நாளந்தா பகுதியில் இந்த ஒரு மாற்றமானது, ஏழைக் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கி, அவர்களுக்கு வளமான பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

