இந்தியர்களே ரெடியா இருங்க; அடுத்தடுத்து வரும் சிறப்பு விமானங்கள்!
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை இயக்குகின்றன.

Published : March 3, 2026 at 2:55 PM IST
டெல்லி: ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை இயக்குகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் அசாதாரண சூழல் நிலவுகிறது. மேலும், அபுதாபி, துபாய், ஷார்ஜா, சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான படைத்தளங்களில் ஈரான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மத்திய கிழக்கு வான்வழி மூடப்பட்டுள்ளதால் 4-வது நாளாக இன்றும் (மார்ச் 3) சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், ஈரான், துபாய் போன்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மிகவும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 10 சிறப்பு விமானங்களை சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து மும்பை, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இன்று (மார்ச் 03) முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு +91-1246173838 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சிறப்பு விமானங்களை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளன. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவில் இருந்து மும்பை, கொச்சின், டெல்லி ஆகிய நகரங்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் 4 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்றும், நாளையும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். இரண்டு சிறப்பு விமானங்கள் மும்பைக்கு இயக்கப்படுகின்றன.
நாளை (மார்ச் 04) ஃபுஜைராவில் இருந்து மும்பை ஒரு சிறப்பு விமானமும், ஃபுஜைராவில் இருந்து டெல்லிக்கு மற்றொரு சிறப்பு விமானமும் இயக்கப்படவுள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப முறையான அனுமதியுடன் கூடுதல் விமானங்களை இயக்கத் தயாராக உள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

