"காசு இல்லன்னா என்ன... கனவு முக்கியம்"| சொந்தச் செலவில் நூற்றுக்கணக்கானோரை குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயார் செய்யும் ஆசிரியர்
கிராமங்களில் இருந்து பாட்னாவுக்கு படிக்க வரும் ஏழை மாணவர்களின் தங்குமிடம், உணவு மற்றும் அன்றாட வாழ்வாதாரச் சிக்கல்களை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து தேவையான நிதியுதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

Published : August 5, 2026 at 9:01 AM IST
பாட்னா: "வசதியில்லாத காரணத்தால் எந்தவொரு திறமையான மாணவரின் அரசுப் பணி லட்சியமும் சிதைந்து விடக் கூடாது" - இந்த ஒற்றை உன்னத நோக்கத்தை மட்டுமே தனது வாழ்நாள் தாரக மந்திரமாக கொண்டு, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த தனஞ்செய் குமார் கல்வி உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சிவில் சர்வீஸ் மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான பயிற்சிகளை அவர் வழங்கி வருகிறார்.
இன்றைய காலகட்டத்தில் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி பெற ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வசதிப் படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய உயரிய பதவிகளுக்கு வர முடியும் என்ற எழுதப்படாத விதியை தனஞ்செய் குமார் உடைத்தெறிந்துள்ளார்.
யார் இந்த தனஞ்செய் குமார்?
பாட்னா மாவட்டம் ஹைவாஸ்பூர் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியை கொண்ட அவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் பாட்னா பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அந்த கிராமத்திலேயே முதல் பட்டதாரி இவர் தான்.
பொறியியல் படிப்பை முடித்த பிறகு, லண்டனில் உள்ள புகழ் பெற்ற கிங்ஸ் கல்லூரியில் முழு கல்வி உதவித்தொகையுடன் பொதுக் கொள்கை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். பிரிட்டிஷ் அரசின் மதிப்புமிக்க 'செவனிங் ஸ்காலர்' விருதையும் பெற்றுள்ளார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
முதுகலை படிப்பை முடித்த பிறகு அங்கேயே அவருக்கு வேலை கிடைத்தது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கிடைத்த போதும், சொந்த ஊர் மக்கள் மீதான பற்று அவரைத் தாயகம் திரும்பத் தூண்டியது.
பீகார் திரும்பிய பிறகு, அவர் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட துணை ஆட்சியர் ஆனார். ஆனால், அந்த வேலை அவருக்கு எதிர்பார்த்த மனநிறைவைத் தரவில்லை. இதையடுத்து, அந்த பணியை துறந்துவிட்டு குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்கினார்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய தனஞ்செய் குமார், "இன்றும் கூட எங்கள் கிராமத்தில் குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. நான் அரசு வேலையில் சேர வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். நானும் அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்றினேன். ஆனால் ஏனோ அந்த வேலையில் திருப்தி ஏற்படவில்லை.
பீகாரை சேர்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராக டெல்லிக்கு சென்று லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி வந்தனர்.
ஆனால், டெல்லியில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்திலேயே சாதாரண மற்றும் ஏழை மாணவர்களுக்கு நான் இங்கே பயிற்சி அளித்து வருகிறேன். வசதியில்லாத மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. மேலும், ஏழை மாணவர்களுக்கு மேலும் பல வசதிகளையும் செய்து தருகிறேன்" என்றார்.
பொருளாதாரரீதியாக பின்தங்கிய, கிராமப்புறக் குடும்பங்களை சேர்ந்த திறமையான மாணவர்களை தேடிப்பிடித்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியையும், சரியான வழிகாட்டுதலையும் இவர் வழங்கி வருகிறார்.
தனஞ்செய் குமாரின் தனித்துவமே, அவர் மாணவர்களிடம் வெறும் வகுப்பறை கட்டணத்தை மட்டும் தள்ளுபடி செய்வதில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவையான லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் அவரே தயாரித்து இலவசமாக வழங்குகிறார்.
பயிற்சி மையம் குறித்து பேசிய தனஞ்செய் குமார், "பீகார் அரசாங்கத்தில் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதன் மூலம் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்" என்றார்.
கிராமங்களில் இருந்து பாட்னா நகரத்திற்கு படிக்க வரும் ஏழை மாணவர்களின் தங்குமிடம், உணவு மற்றும் அன்றாட வாழ்வாதாரச் சிக்கல்களை புரிந்து கொண்டு, அவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து தேவையான நிதியுதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
தனஞ்செய் குமார் மேற்கொண்ட இந்த தன்னலமற்ற முயற்சியால் இதுவரை நூற்றுக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவரிடம் பயின்ற பல கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள், விவசாயிகளின் பிள்ளைகள் இன்று பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உயரிய பொறுப்புகளில் அமர்ந்து முத்திரை பதித்து வருகின்றனர்.
மிகக் கடுமையான வறுமைச் சூழலிலும், முறையான வழிகாட்டுதலும் அன்பும் கிடைத்தால் சாமானியர்களாலும் சாதிக்க முடியும் என்பதை இவரது மாணவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மாணவர் இம்தியாஸ் கூறுகையில், "குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராக இனி டெல்லிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தனஞ்செய் சாரின் வழிகாட்டுதலில் எங்களுக்கு சிறந்த கல்வியும் பயிற்சியும் கிடைக்கிறது. இங்கு பயின்ற ஏராளமான மாணவர்கள் வெற்றி பெற்று அதிகாரிகளாக உள்ளனர்" என்றார்.
மற்றொரு மாணவரான ராகுல் குமார் கூறுகையில், "இங்கு ஏழை மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன" என்றார்.

