ETV Bharat / bharat

இனி விமான டிக்கெட்டை ரத்து செய்தால் 100 சதவீத ரீஃபண்ட்.. ஆனால் ஒரு கண்டிஷன் - டிஜிசிஏ அசத்தல் அறிவிப்பு

இந்த சலுகை உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பும், சர்வதேச விமானங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பும் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே செல்லுபடி ஆகும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 7:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது உள்ளிட்ட விதிகளை விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ வகுத்துள்ளது.

இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பயணிகள் உள்நாடு அல்லது சர்வதேச பயணங்களுக்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம். முன்பதிவு செய்யும்போதே கட்டணமும் பிடித்தம் செய்யப்படும். ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தவிர, ரீபண்ட் செய்யப்படும் தொகையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரவில்லை என்றால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதில், டிராவல் ஏஜென்ட்டுகள் அல்லது ஆன்லைன் போர்ட்டல்களில் முன்பதிவு செய்பவர்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதன் விதிகளை திருத்தி புதிய வழிகாட்டுதலை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ரத்து செய்துகொள்ளலாம். அதாவது 100 சதவீத ரீபண்ட் கிடைக்கும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல, பயணத்தை ரத்து செய்வது மட்டுமின்றி அதே டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றினாலும் கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்படாது.

இருப்பினும், இந்த சலுகை உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பும், சர்வதேச விமானங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பும் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே செல்லுபடி ஆகும். அதற்கு குறைவான நாட்களில் இந்த 48 மணி நேர சலுகையை பெற முடியாது. இதற்காக, பயணிகள் முன்பதிவு செய்த நொடியில் இருந்து 48 மணி நேரத்திற்குள் அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளத்தில் 'லுக்-இன் ஆப்ஷன்' வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தவிர, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணியின் விவரத்தில் ஏதேனும் பிழை இருந்தால், அதை 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட வெப்சைட்டில் திருத்திக்கொள்ளலாம். இதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, டிராவல் ஏஜென்ட்டுகள் அல்லது ஆன்லைன் போர்ட்டல்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும், சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களே அதற்கு முழு பொறுப்பு என்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்தால் 14 வேலை நாட்களுக்குள் அவர்களுக்கு ரீபண்ட் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பீகாரில் தமிழக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது மோதிய லாரி: காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் பலி.. 22 பேர் படுகாயம்