ETV Bharat / bharat

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு (Karnataka CMO)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 7:43 PM IST

1 Min Read
Choose ETV Bharat

பெங்களூரு: கர்நாடக மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் காங்கிரஸ் தலைமை வெளியிடவில்லை.

இதையடுத்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர். இருந்தாலும் முதல்வர் மாற்றம் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக அவ்வபோது பேச்சுக்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் சித்தராமையா முதல்வராக பதவியேற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

இதன் காரணமாக கடந்த மே-26-ஆம் தேதி இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு; 2029 தேசிய விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம்

இந்நிலையில் கட்சி தலைமையின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் கடந்த வாரம் சித்தராமையா வழங்கினார். இதைத்தொடர்ந்து 138 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் டி.கே.சிவகுமார் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சில தினங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்று நிகழ்ச்சியில், டி.கே.சிவகுமார் கர்நாடக முதல்வராக பதவியேற்று கொண்டார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.

மேலும் அமைச்சர்களாக முனியப்பா, ஜார்ஜ், பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, சித்தராமையாவின் மகன் யதீந்திரா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பிரதமர் வாழ்த்து: கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோன்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி குமாரசாமியும் டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் வாழ்த்து: தமிழக முதலமைச்சர் விஜய்யும் டி.கே.சிவகுமாருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 'கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று அவர் தெரிவித்துள்ளார்.