காங்கிரஸில் 40 ஆண்டுகள் பயணம்- எம்எல்ஏ டூ முதலமைச்சர்: யார் இந்த டி.கே.சிவக்குமார்?
சித்தராமையாவின் ராஜிநாமாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தின் 18-வது முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

Published : May 28, 2026 at 10:20 PM IST
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகள் பயணம் செய்து தற்போது முதலமைச்சர் அரியணையில் அமரவுள்ள டி.கே.சிவக்குமார் கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையின் அறிவுறுத்தலின்படி சித்தராமையா, இன்று (மே 28) துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்களுடன் பிற்பகல் 03.00 மணியளவில் பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகைக்கு சென்று ஆளுநரின் செயலாளரிடம் தனது முதலமைச்சர் பதவி ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
கர்நாடகா மாநில ஆளுநர் தற்போது வெளியூரில் இருப்பதால் ஆளுநரிடம் செயலாளரிடம் கடிதம் வழங்கியுள்ளார். அத்துடன், தனது ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ளும்படியும் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக தனது இல்லத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்களுக்கு காலை உணவு விருந்தளித்தார். பின்னர் சித்தராமையாவின் காலில் விழுந்து டி.கே.சிவக்குமார் ஆசிபெற்றார்.
கர்நாடகா மாநில ஆளுநர் தற்போது வெளியூரில் இருப்பதால் அவர் வந்த பிறகே பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த டி.கே.சிவக்குமார்?- விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த 1962- ஆம் ஆண்டு மே 15- ஆம் தேதி கர்நாடகா மாநிலம், கனகபுரா தாலுகாவில் உள்ள தொட்டலஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சிவக்குமார். கர்நாடகா மாநிலத்தின் செல்வாக்குமிக்க ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் மைசூரில் உள்ள கர்நாடகா மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். கல்லூரி பயிலும் போதே மாணவர் அமைப்புகளில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். இதனால் அவருக்கான அரசியல் கதவு திறந்தது.
ஹெச்.டி.தேவகவுடாவை வீழ்த்தி பேரவைக்குள் நுழைந்த டி.கே.எஸ்
காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு டி.கே.சிவக்குமார் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தனது 23 வயதில் அதாவது 1985- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சதனூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டி.கே.சிவக்குமார் 15,803 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பிறகு 1989- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சதனூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டி.கே.சிவக்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அப்போதைய மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடாவை 13,650 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தில் முதன்முறையாக கர்நாடகா சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். கடந்த 1989- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து எட்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று கர்நாடகா அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.
எம்எல்ஏ டூ துணை முதலமைச்சர்
டி.கே.சிவக்குமாரின் கட்சி மற்றும் மக்கள் பணிகளைப் பாராட்டி, 1994- ஆம் ஆண்டு அக்டோபர் 17- ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எஸ்.பங்காரப்பா தலைமையிலான அமைச்சரவையில் மாநில சிறைத்துறை மற்றும் ஊர்க்காவல் படையின் அமைச்சராகப் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து, 1999- ஆம் ஆண்டு முதல் 2004- ஆம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், 2013- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு வரை எரிசக்தித்துறை அமைச்சராகவும், 2018- ஆம் ஆண்டு முதல் 2023- ஆம் ஆண்டு வரை நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2023- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை துணை முதலமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். இத்துடன் பெங்களூரு நகர மேம்பாடு மற்றும் நீர்வளத்துறையையும் கூடுதலாகக் கவனித்து வருகிறார்.
டி.கே.சிவக்குமாரின் சாதனை பட்டியல்
மறைந்த முதலமைச்சர் எஸ்.பங்காரப்பா தலைமையிலான அமைச்சரவையில் மிக இளம் வயதிலேயே அமைச்சரான பெருமை டி.கே.சிவக்குமாரையே சாரும். கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.
கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தின் கட்டுமானம் உள்பட கர்நாடகாவிற்கான சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களை அமைக்கத் திட்டமிடுவதில் அவரது பங்கு அளப்பரியது ஆகும். 2013 முதல் 2018 வரை மிக நீண்ட காலம் மின்சாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த டி.கே.சிவக்குமார், மந்த நிலையில் இருந்த மின்சாரத்துறையை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தும்கூர் மாவட்டம், பவகடாவில் (Pavagada) இந்தியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலையை அமைத்தார்.
தேர்தல் வியூகத்தை கண்டு வியந்த காங்கிரஸ்
பெல்லாரி மற்றும் பீகார் தேர்தல்கள் போன்ற பல முக்கிய இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததில் டி.கே.சிவக்குமாரின் தேர்தல் வியூகங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர். இந்த வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களால் டி.கே.சிவக்குமார் பாராட்டப்பட்டார். சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பயணித்து வரும் டி.கே.சிவக்குமார், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு மிக நெருக்கமானவராக உள்ளார்.
கர்நாடகாவில் பணக்கார அரசியல்வாதி
கடந்த 2023-ஆம் ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள தரவுகளின்படி, இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 1,413 கோடி ஆகும். கடந்த 2018- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சொத்து மதிப்பு ரூபாய் 840 கோடி எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், 2023- ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மட்டும் டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூபாய் 573 கோடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குடும்பத்துடன் சம்மந்தம்
டி.கே.சிவக்குமார்- உஷா சிவக்குமார் தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் ஆப்ரணா ஆகிய இரண்டு மகள்களும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளார். இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா, கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனும், மறைந்த கேஃப் காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தின் மகனுமான அமர்த்தியா ஹெக்டேவை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| இதையும் படிங்க: கடைசி விளையாட்டுத் திடலான பூங்காக்களை காப்போம்: டெல்லி காவல் துறையின் 'ஆபரேஷன் விமுக்த்' திட்டம் |
திஹார் சிறைக்கு சென்ற டி.கே.சிவக்குமார்
கடந்த 2017- ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக இழுப்பதைத் தடுக்கும் வகையில் அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து நட்சத்திர ஹோட்டலில் டி.கே.சிவக்குமார் தங்க வைத்திருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதேபோல், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2019- ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட டி.கே.சிவக்குமார், டெல்லி திஹார் சிறையில் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அரசு சார்ந்த ஒப்பந்தங்களை தனது மருமகனுக்கு வழங்கியது, கிரானைட் மற்றும் சுரங்கத்தொழில் தொடர்பான நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் இவர் மீது உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக இவர் மீது சிபிஐயும் வழக்குப்பதிவுச் செய்திருந்தது.
துணை முதலமைச்சர் டூ முதலமைச்சர்
கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வரும் டி.கே.சிவக்குமார், 2023- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கும், ஆட்சியமைவதற்கும் அரும்பாடுபட்டவர். இவரை முதலமைச்சராக்க காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அதிக எண்ணிக்கையில் ஆதரவு அளித்தபோதிலும் சித்தராமையாவை கட்சித் தலைமை முதலமைச்சராகியது. கர்நாடகா மாநிலத்தின் 9-வது துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவி வகித்து வருகிறார்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுறுத்தலின் பேரில் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதையடுத்து, கர்நாடகாவின் 18- வது முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் விரைவில் பதவியேற்கவுள்ளார். இதனால் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

