ETV Bharat / bharat

ஈரான் மீது கொடூர தாக்குதல்: ‘மோடியின் மெளனம்’ எதை சுட்டிக்காட்டுகிறது? சோனியா காந்தி கேள்வி

முறையான போர் அறிவிப்பு ஏதுமின்றி, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 4:59 PM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மெளனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி படுகொலை விவகாரத்தில் இந்திய அரசின் ‘மௌனம்’ பொறுப்பற்றது மற்றும் நடுநிலைமை அல்ல, இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முறையான போர் அறிவிப்பு ஏதுமின்றி, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே இந்த படுகொலை நடைபெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோடியின் மெளனம்

ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை விமர்சித்த சோனியா காந்தி, இது தவறான முன்னுதாரணங்களுக்கு வழிவகுக்கும் என்றும், சர்வதேச சட்ட மீறல்களை இந்தியா கண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காசா போரில் உலகளவில் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு இந்தியா அளிக்கும் நிபந்தனையற்ற ஆதரவு மற்றும் காமேனி படுகொலை மீதான மௌனம் ஆகியவை கவலையளிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பிரதமரின் மெளனம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். அமைதியான முறையில் பிரச்னைகளைத் தீர்ப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை என்பதை மறந்து விட வேண்டும் எனவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

பறிபோன பிஞ்சுகுழந்தைகளின் உயிர்

பிப்ரவரி 27 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்திய தாக்குதலில் காமேனி கொல்லப்பட்ட விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராக்கெட்டுகள் ஏவி, 100-க்கும் மேற்பட்ட அப்பாவி ஈரானிய பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டதும் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு ரஷ்யா, சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், பிப்ரவரி 26-ஆம் தேதி தனது இரண்டு நாள்கள் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க - இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் தொடர்பாக இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலரை தட்டி தூட்டிய போலீஸ்

அதே நேரம், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.