ETV Bharat / bharat

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பால்வாடி பிள்ளைகள்! ஒரு நக்சல் கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றிய ஆசிரியர்

வீடு வீடாக சென்று கல்வியின் இன்றியமையாத தேவையை தலைமை ஆசிரியர் பிரமோத் குமார் விளக்கினார். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் கல்வியால் மட்டுமே மிகப்பெரிய உயரத்தை அடைந்த மாபெரும் மனிதர்களை பற்றி எடுத்துக் கூறினார்.

கரோவா கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்கள்
கரோவா கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 3:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கயா: கிராமம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மண்ணால் கட்டப்பட்ட வீடுகள்; கிழிந்த அல்லது பழைய துணிகளை உடுத்தியிருக்கும் மக்கள்; தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள் என ஒரு வடமாநில கிராமத்தை கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படியே அச்சு பிசகாமல் இருக்கிறது பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கரோவா கிராமம்.

கல்வி அறிவிலும், வளர்ச்சியிலும் பின்தங்கிய தோற்றத்தை கொண்ட அந்த கிராமம் குறித்தான நமது புரிதல், அங்குள்ள சிறுவர், சிறுமிகளிடம் பேசிய அடுத்த நொடியே உடைந்து சின்னாபின்னமாகிறது. ஆம், ஒரு வளர்ந்த நகரத்தில் உள்ள பெரிய சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பேசும் அவர்களை கண்டு ஒரு நிமிடம் மூர்ச்சையாகி நின்றுவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தலைமை ஆசிரியர் பிரமோத் குமார்
தலைமை ஆசிரியர் பிரமோத் குமார் (ETV Bharat)

காரணம், அந்த கிராமத்தின் வரலாறு அப்படி. பல தசாப்தங்களாக நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த கிராமம் அது. துப்பாக்கி, வெடிகுண்டுகளின் சத்தத்துக்கு பழகிப் போயிருந்த அந்த கிராமத்தில், சில ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தைகளின் வாய்ப்பாடு சத்தம் கேட்க தொடங்கியது.

அதற்குள்ளாக, எப்படி இப்படியொரு ஆங்கிலப் புலமையை இந்த குழந்தைகளால் பெற்றிருக்க முடியும் என கேட்கிறீர்களா? இந்த கேள்விக்கு ஒரே ஒரு பெயர்தான் பதிலாக வருகிறது. 'பிரமோத் குமார்'.

படிப்பு வாசனையே அறியாத கிராமம்

கரோவா கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்தான் இந்த பிரமோத் குமார். ஏதோ ஒரு பின்தங்கிய கிராம பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி கிடைத்துவிட்டது; அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு காலத்தை கடத்துவோம்' என நினைக்கும் சராசரி ஆளாக பிரமோத் குமார் இருக்கவில்லை.

தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியை நூறு சதவீதம் அல்ல; 200 சதவீதம் மனநிறைவுடன் செய்ய வேண்டும் என உறுதியோடு, அந்த பள்ளிக்கு நுழைந்த அவருக்கு பல சவால்கள் காத்திருந்தன. பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு வரவழைப்பதே அவற்றில் முதன்மையான சவாலாக இருந்தது. படிப்பின் வாசனையே அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவார்கள்?

கரோவா கிராம ஆரம்பப் பள்ளியில் பயிலும் பிள்ளைகள்
கரோவா கிராம ஆரம்பப் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் (ETV Bharat)

வீடு வீடாக சென்ற தலைமை ஆசிரியர்

மக்களின் அறியாமையை கண்டு மனம் வெதும்பிய பிரமோத் குமார், தினமும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேச தொடங்கினார். கல்வியின் இன்றியமையாத தேவையை விளக்கினார். படிப்பது என்பது வெறும் கணக்கு போட மட்டுமே உதவும் என நம்பியிருந்த மக்களுக்கு, கல்வியின் மகத்துவத்தை உணர்த்தினார். எந்தவொரு பின்னணியும் இல்லாமல் கல்வியால் மட்டுமே மிகப்பெரிய உயரத்தை அடைந்த மாபெரும் மனிதர்களை பற்றி எடுத்துக் கூறினார்.

பிரமோத் குமாரின் பேச்சால் தெளிந்த இமாம் கஞ்ச் கிராம மக்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தொடங்கினர். ஆனால், பெற்றோர்கள் அனுப்பியும் பல பிள்ளைகள் பள்ளிக்கு வராமல் தெருக்களில் சுற்றித்திரிந்தனர். எனவே, அனைத்து பிள்ளைகளும் பள்ளிக்கு வருவதற்காக வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கினார் பிரோமத்குமார். பள்ளிக்கு வராத பிள்ளைகளுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக தங்கள் பிள்ளைகளை தேடி பிடித்து பள்ளிக்கு கொண்டு வருவார்கள்.

நுனிநாக்கு ஆங்கில பயிற்சி

படிப்பின் வாசமே அறியாத இந்த கிராம பிள்ளைகளுக்கு ஒருபக்கம் பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு அவசியம் என்பதை உணர்ந்தார் பிரமோத் குமார். அவர்களுக்கு தினமும் ஸ்போக்கன் இங்கிலீஷ் (ஆங்கில பேச்சு திறன்) பயிற்சி அளித்தார். "முதலில், ஆங்கில சொற்களே வாய்க்குள் நுழையாமல் தடுமாறிய பிள்ளைகள், சில மாதங்களுக்கு பிறகு தப்பும் தவறுமாக பேச தொடங்கினர். பல மாத பயிற்சிக்கு பிறகு அவர்கள் சகஜமாக ஆங்கிலத்தில் உரையாட தொடங்கினார்கள்" என்கிறார் பிரமோத் குமார்.

"இங்குள்ள ஒவ்வொரு பிள்ளைகளும் அரசு பணியில் அமர வேண்டும் என்பதே எனது கனவு. இங்கு பயிலும் கிட்டத்தட்ட அனைவருமே அடித்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களை நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து கைதூக்கிவிட்டால் போதும். அவர்களின் சந்ததியினர் தானாகவே உயர்ந்து விடுவார்கள். இப்போது இங்கு ஒரே ஒரு ஆரம்பப் பள்ளிதான் உள்ளது. எனவே 5ஆம் வகுப்புக்கு பின்னர், பலரும் படிப்பை கைவிட்டு விடுகிறார்கள். எனவே, இப்பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி தேவை. அதற்காக அரசாங்கத்திடம் மனு அளித்துள்ளோம்" என பிரமோத் குமார் கூறினார்.

ஒரு யுகத்திற்கான ஆசிரியர்

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கு வந்த ஒரு சிறுவனை அழைத்தோம். உனது பெயர் என ஆங்கிலத்தில் கேட்டதுதான் தாமதம். "என் பெயர் பிரின்ஸ் குமார். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது என் லட்சியம். முதலில் ஆங்கிலத்தில் பேச மிகவும் பயப்படுவேன். இப்போது எனக்கு எந்த பயமும் இல்லை" என மேலை நாட்டு உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் கூறினான்.

பிரின்ஸ் குமார் எங்களிடம் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த அவனது தோழி பூஜா குமாரியும் அருகில் வந்தாள். அவளிடமும் பேச்சு கொடுத்தோம். "எனது பெற்றோர்கள் படிக்கவில்லை. ஆனால், நான் படிக்கிறேன். இதன் மூலம் அவர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றுவேன். கல்வியால் ஒரு பெரிய பதவிக்கு வந்து அதன் மூலம் பெயர் வாங்க ஆசைப்படுகிறேன்" என நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவர் பேசினார்.

வியப்பு மாறாமல், பிரமோத் குமாரை பார்த்தோம். அவரோ எந்தவொரு சலனமும் இல்லாமல், பிள்ளைகளின் வீட்டுப்பாட நோட்டுகளை சரிபார்க்க தொடங்கி இருந்தார். ஒரே ஒரு சிறந்த ஆசிரியரால் ஒரு சமூகத்தை முன்னேற்ற முடியும் என கூறுவார்கள். அப்படியொரு நல்லாசிரியர் கரோவா கிராமத்துக்கு கிடைத்துவிட்டார்.