ETV Bharat / bharat

அதிகரிக்கும் குழந்தை கடத்தல்கள்...சிறுமிகள் அதிகம் இலக்காவது ஏன்? NCRB-இன் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை இந்தியாவில் எத்தனை குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்?எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்? எதனால் குழந்தைகள் காணாமல் போகின்றனர்? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

பிரதிநிதித்துவப்படம் - குழந்தை கடத்தல்
பிரதிநிதித்துவப்படம் - குழந்தை கடத்தல் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2026 at 8:41 PM IST

5 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஒரு தந்தை செல்ஃபோனில் பேசியபடி, சுமார் 2 வயது மதிக்கதக்க தனது மகனுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிற்கிறார். ரயிலில் ஏற கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த இளைஞர் ஒருவர் அவரிடம் ஏதோ விவரம் கேட்க, அவரும் பதில் சொல்கிறார். அந்த நேரத்தில் அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த மற்றொரு இளைஞர் சிறுவனின் வாயை அடைத்தபடி அங்கிருந்து தூக்கிச் செல்கிறார். விவரம் கேட்ட நபர் அங்கிருந்து நகர, தனது மகனை காணாமல் போனதை அறிந்து தந்தை பதற்றத்துடன் தேடி ஓடுகிறார்.

இந்த சம்பவம் முழுக்க ஓரிரு நிமிடங்களில் நடந்துவிட்டது. இது ஏதோயொரு சினிமாவில் இடம்பெற்ற காட்சி கிடையாது. இந்தியாவில் உண்மையிலேயே நடந்த சம்பவம்தான் இது. ஒரு வருடத்திற்கு முன்பு சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவி வைரலானது.

இதுபோன்று குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் என்றோ, எப்போதோ நடப்பதில்லை. ஒருநாளில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில், பல்வேறு சூழ்நிலைகளில், பல காரணங்களுக்காக நடைபெறுகின்றன. குழந்தைகளை இழந்த எத்தனை பெற்றோர்கள் மீண்டும் அவர்களை பார்த்துவிட முடியாதா? என்ற ஏக்கத்துடன் ஏங்கி நிற்கின்றனர் என்பதை காவல் நிலையங்களின் வாசல்களில் நம்மால் பார்க்க முடியும்.

இதனால் தான் கடைவீதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற கூட்ட நெரிசல்மிக்க பரபரப்பான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு காவலர்கள் ஒலிபெருக்கிகளில் அறிவித்துக்கொண்டே இருக்கின்றனர்.

உலகம் முழுவதுமே குழந்தை கடத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, நமது நாட்டில், பிச்சை எடுக்க வைத்தல், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல், குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்துதல், பாலியல் தொழில்களில் ஈடுபட வைத்தல், பெற்றோரிடம் மிரட்டி பணம் பறித்தல், உறுப்பு திருட்டு போன்ற பல்வேறு காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, சில குழந்தைகள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அல்லது சிலரின் ஆசை வார்த்தைகளால் தூண்டப்பட்டு, பெற்றோரை விட்டு பிரிந்து தனியே செல்லும் முடிவை எடுக்கின்றனர். இதுபோன்று தானாகவே வெளியே செல்கிற குழந்தைகள் மீண்டும் வீட்டுக்கு செல்ல முடியாமல் தனித்து விடப்படுகின்றனர்.

காணாமல் போன குழந்தைகளின் மாநில வாரியான விவரம்
காணாமல் போன குழந்தைகளின் மாநில வாரியான விவரம் (ETV Bharat)

குழந்தை கடத்தல் வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள்

2011ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, தனது மகள் காணாமல் போய்விட்டதாக ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமது மனு மீது பல ஆண்டுகள் பலகட்ட விசாரணைகள் நடைபெற்ற போதிலும், எந்த பலனும் கிடைக்காததால் விரக்தியடைந்த அவர், உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கானது கடந்த மே 22ஆம் தேதி நீதிபதிகள் ஹசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவற்றில் முக்கியமாக, ஒரு குழந்தை காணாமல் போனது குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக FIR பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில், காணாமல் போன குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஒருவர் காணாமல் போனது தொடர்பான தகவல் கிடைத்தவுடனே, பெற்றோர் அல்லது முதற்கட்ட விசாரணைக்கு காத்திருக்காமல் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

மேலும், ஒரு குழந்தை காணாமல் போனதை புகாராக மட்டுமே பதிவு செய்யாமல், ஆள்கடத்தலுக்கான குறிப்பிட்ட இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

தற்போது கடத்தப்படும் குழந்தைகளை காவல்துறை கண்டுபிடித்தாலும், அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இனிமேல் மீட்கப்படும் குழந்தைகள் 24 மணிநேரத்துக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதே சமயம், குடும்பத்தினரே கடத்தலில் ஈடுபட்டதாக தெரிந்தால், உரிய விசாரணைக்கு பிறகே ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

காணாமல் போன குழந்தைகளின் மாநில வாரியான விவரம்
காணாமல் போன குழந்தைகளின் மாநில வாரியான விவரம் (ETV Bharat)

அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களையும் இணைக்கும் வகையில் ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இதுபோன்ற கடுமையான நெறிமுறைகளை வழங்க என்ன காரணம்? 2020 முதல் 2024 வரை இந்தியாவில் எத்தனை குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்? அவர்களில் எத்தனை ஆண், பெண் குழந்தைகள்? கடத்தலுக்கான காரணங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

எத்தனை குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்?

2024ஆம் ஆண்டின் அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நமது நாட்டில் சிறுவர்கள் 35,895, சிறுமிகள் 1,11,271, திருநங்கைகள் 9 பேர் என 18 வயதுக்கு உட்பட்டவர்களில் மொத்தம் 1,47,175 பேர் ஒரே ஆண்டில் காணாமல் போயுள்ளனர். இந்த புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் சிறுவர்களைவிட சிறுமிகளே அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். சிறுமிகளே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறவர்களாக இருக்கின்றனர்.

2024ஆம் ஆண்டில் மட்டும் மேற்கு வங்கத்தில் 22,742 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில் பெண் குழந்தைகளே அதிகம். மத்தியப் பிரதேசத்தில் 3,849 சிறுவர்களும், 15,282 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். இந்த தரவுகளின்படி, நமது நாட்டில் குழந்தைகள் காணாமல் போவதில் மேற்கு வங்கம் முதலிடத்தையும், மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. அதேசமயம், அசாம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டும் தான் திருநங்கைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற மாநிலங்களில் திருநங்கைகள் குறித்த பதிவுகள் இல்லை.

காணாமல் போன சிறுவர் சிறுமியர்களின் மாநில வாரியான விவரம்
காணாமல் போன சிறுவர் சிறுமியர்களின் மாநில வாரியான விவரம் (ETV Bharat)

2020 முதல் 2024 வரை எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டனர்?

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில், 15,832 சிறுவர்கள், 48,717 சிறுமிகள் என மொத்தம் 64,573 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டில் 17,845 சிறுவர்கள், 58,980 சிறுமிகள் என மொத்தம் 76,827 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவே 2022ஆம் ஆண்டில், 20,254 சிறுவர்கள், 60,281 சிறுமிகள் என மொத்தம் 80,561 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டில் 1,55,283 சிறுவர்கள், 3,05,585 சிறுமிகள் என மொத்தம் 4,60,886 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டில் 23,902 சிறுவர்கள், 74,919 சிறுமிகள் என மொத்தம் 98,826 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அதாவது, காணாமல் போனவர்களில் 2020ஆம் ஆண்டு சிறுவர்கள் 54.6%, சிறுமிகள் 61.5% என மொத்தம் 59.7% பேரும், 2021ஆம் ஆண்டு சிறுவர்கள் 57.2%, சிறுமிகள் 65.5% என மொத்தம் 63.3% பேரும், 2022- இல் சிறுவர்கள் 60%, சிறுமிகள் 64.1% என மொத்தம் 63% பேரும், 2023ஆம் ஆண்டு சிறுவர்கள் 49.7%, சிறுமிகள் 55% என மொத்தம் 53.1% பேரும், 2024 - இல் சிறுவர்கள் 66.6%, சிறுமிகள் 67.3% என மொத்தம் 67.1% பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன சிறுவர் சிறுமியர்களின் மாநில வாரியான விவரம்
காணாமல் போன சிறுவர் சிறுமியர்களின் மாநில வாரியான விவரம் (ETV Bharat)

2020-2024இல் மனித கடத்தல் வழக்குகளும் கைதுகளும்

இந்த காலகட்டத்தில் ஏராளமான மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020இல் 1,377 சிறுவர்கள், 845 சிறுமிகள் என மொத்தம் 2,222 பேர் கடத்தப்பட்ட வழக்குகளில் 4,966 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 2021இல் 1,570 சிறுவர்கள், 1,307 சிறுமிகள் என மொத்தம் 2,877 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளில் மொத்தம் 5,755 பேர் கைது செய்யப்பட்டனர்.

2022 இல் சிறுவர், சிறுமிகள் கடத்தல் குறித்து 2,878 வழக்குகள் பதிவான நிலையில், மொத்தம் 5,864 பேர் கைது செய்யப்பட்டனர். 2023இல் 2,687 வழக்குகள் பதிவான நிலையில், இந்த குற்றத்தை இழைத்ததாக 6,024 பேர் கைது செய்யப்பட்டனர். 2024இல் சிறுவர் 1,384, சிறுமிகள் 913 கடத்தலில் மொத்தம் 2,297 வழக்குகள் பதிவான நிலையில், இக்கொடூர குற்றத்தில் தொடர்புடைய 5,904 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

2020 முதல் 2024 வரையிலான காணாமல்போன குழந்தைகளின் எண்ணிக்கை
2020 முதல் 2024 வரையிலான காணாமல்போன குழந்தைகளின் எண்ணிக்கை (ETV Bharat)

குழந்தைகள் காணாமல் போவதற்கான முக்கிய காரணங்கள்

குழந்தைகள் காணாமல் போவதற்கு பல காரணங்கள் இருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) கூறுகிறது. சில நேரங்களில் பணத்திற்காக குழந்தைகள் கடத்தி செல்லப்படுகின்றனர். அதேசமயம், சில நேரங்களில் குழந்தைகளுக்கு தாங்கள் வாழும் சூழல் பிடிப்பதில்லை. அவர்கள் தங்களது சொந்த இடத்தையே பாதுகாப்பற்றதாக கருதுவதால் தாமாகவே வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதற்கு பெற்றோரே முக்கிய காரணம். வீட்டில் பெற்றோர்கள் போடும் சண்டைகள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதாக கூறுகிறது NHRC.

இதேபோல் தனிபட்ட விரோதத்தின் காரணமாகவோ, பணத்திற்காகவோ ஆள் கடத்தல் கும்பல்கள் குழந்தைகளை கடத்திச் செல்கின்றனர். சில நேரங்களில் திரைப்படத்தில் நடிக்கவோ, மாடலிங்கில் ஈடுபடவோ வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையிலும், ஆடம்பரமான நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி ஏமாந்துபோகின்றனர் என்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

இதையும் படிங்க:

1. EXCLUSIVE: நம்பிய மக்களை ஏமாற்றிவிட்டார்; இசக்கி சுப்பையா எம்எல்ஏ பதவி ராஜினாமா குறித்து அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர்கள் குமுறல்

2. EXCLUSIVE | இது இன்றி கள்ளழகர் திருவிழா இல்லை - ஆனாலும் கண்ணீர் வடிக்கும் 'தோப்பறை' தொழிலாளர்கள்

3. EXCLUSIVE | உத்திரமேரூரின் சிறப்பை பறைசாற்றும் குடவோலை தேர்தல் முறை: இன்றைய நவீன தேர்தல் எப்படி இருக்கிறது?