கேஸ் சிலிண்டருக்கான மானியம் ரூ. 50 உயர்த்தி வழங்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அல்லது சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ஜான் குமார் வலியுறுத்தினார்.

Published : August 29, 2026 at 3:59 PM IST
புதுச்சேரி: சமையல் எரிவாயுக்கான மானியத் தொகை ரூ.50 உயர்த்தப்படுவதாக புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. அப்போது, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையிலான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அந்தவகையில், புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு (கியாஸ்) சிலிண்டருக்கான மானியத் தொகை உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதன்படி, சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மானியத்துடன் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.350 ஆகவும், மஞ்சள் நிற ரேஷன் அட்டையை கொண்டிருப்போருக்கு ரூ.50 மானியத் தொகை உயர்த்தப்பட்டு இனி ரூ.200 ஆக வழங்கப்பட உள்ளது.

தொடர்ந்து, ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் போலவே, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் உயர் படிப்பைத் தடையின்றித் தொடரும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து மாநிலத்தின் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
இது தொடர்பாக பேசிய அவர், "லாஸ்பேட்டை மற்றும் தவளகுப்பம் ஆகிய பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். புதுச்சேரியில் எதிர்கால தேவைக்கேற்ப புதிய துணை மின் நிலையங்கள் தேவைப்படும் அனைத்து இடங்களும் கண்டறியப்பட்டு அவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கும், தொழில்துறைக்கும் தட்டுப்பாடின்றி சீரான மின்சாரம் கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும்" என உறுதியளித்தார்.
இந்த அறிவிப்புகளின்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் எழுப்பப்பட்டது. நீண்ட காலமாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சட்டப்பேரவையில் பேசிய எம்எல்ஏ ஜான் குமார், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அல்லது சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக அனைத்து விதமான நடவடிக்கையையும் எடுக்க அரசு தயாராக உள்ளது. இதேபோல், யூனியன் பிரதேசமான டெல்லியில் பின்பற்றப்படுவதைப் போல, புதுச்சேரி அரசு ஊழியர்களின் ஓய்வூதிய செலவினங்களை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
குறிப்பாக, புதுச்சேரி மாநில அரசு எப்போதும் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு, மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் முழுமையாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றும்" என கூறினார்.

