கரூர் சம்பவம்: விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்
ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், தற்போது அந்த கட்சியின் தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

Published : January 6, 2026 at 2:35 PM IST
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு வரும் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரை நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவையும் அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, கரூர் துயர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் பல்வேறு தகவல்களை சேகரித்து, கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், தவெக நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
| இதையும் படிங்க: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு - அதிகாரிகளிடம் இழப்பீடு வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு |
அதையடுத்து, தவெக நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்தது. அதன்படி, கடந்த வாரம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மூன்று நாட்கள் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், தற்போது அந்த கட்சியின் தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அனுப்பிய அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

