ETV Bharat / bharat

இந்தியாவில் இறந்த தந்தை: வங்கதேசத்தில் வசிக்கும் மகள் இறுதி அஞ்சலி - நடந்தது என்ன?

இந்தியாவில் இறந்த தந்தையின் உடலுக்கு வங்கதேசத்தில் வசிக்கும் மகள் இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட இந்திய-வங்கதேச வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இஸ்ராஃபில் ஹல்சோனா உடலுக்கு மகள்  உம்மேஹாரா பீபி நேரில் அஞ்சலி
இஸ்ராஃபில் ஹல்சோனா உடலுக்கு மகள் உம்மேஹாரா பீபி நேரில் அஞ்சலி (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 6, 2026 at 8:44 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: இந்தியாவில் இறந்த தந்தையின் உடலுக்கு, வங்கதேசத்தில் வசிக்கும் மகள் இந்திய-வங்கதேச எல்லையில் அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தின் சப்ரா பகுதியை சேர்ந்தவர் இஸ்ராஃபில் ஹல்சோனா. 100 வயதை கடந்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்கள் முன்பு இறந்தார். இவரது உடலுக்கு அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, இறந்த முதியவருடைய ஒரு மகள் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தந்தை இறந்த செய்தியை வங்கதேசத்தில் வசிக்கும் முதியவரின் மகளான உம்மேஹாரா பீவியிடம் தொலைபேசி வழியாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தை இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும், தனது தந்தையின் முகத்தை கடைசியாக ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்றும் உறவினர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையே தற்போது நல்லுறவு இல்லாத நிலையில், அவரை இந்தியா எப்படி அழைத்து வருவது என்று புரியாமல், அவரது உறவினர்கள் கிராம பஞ்சாயத்தினரிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கேட்டறிந்த கிராம பஞ்சாயத்தினர், இந்திய எல்லை பாதுகாப்பு படையின் (BSF) 101-வது பட்டாலியனை தொடர்பு கொண்டனர். முதியவரின் இறப்பு தொடர்பாக அனைத்து தவல்களை எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் எடுத்துக் கூறி, இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு உதவி செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர்.

நிலைமையை புரிந்து கொண்ட எல்லை பாதுகாப்பு படையினர், வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினரை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படையினரும் இணைந்து இந்த சம்பவத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அதில், உயிரிழந்த முதியவரை இரு நாடுகளின் எல்லை பகுதிக்கு எடுத்து வருவதும் என்றும், அங்கு வந்து தந்தையின் உடலுக்கு உம்மேஹாரா பீவி அஞ்சலி செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதியவரின் உடல் இரு நாட்டு எல்லை பகுதிக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்டு வந்தனர். அங்கு காத்திருந்த முதியவரின் மகள், தந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இந்த விவகாரத்தில் இரு நாட்டு பாதுகாப்பு வீரர்களும் மிகுந்த மனிதாபிமானத்தோடு நடந்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.