140 கிராமங்களின் துயர் துடைத்த 'பாலங்களின் மனிதர்' கிரிஷ் பரத்வாஜ் காலமானார்
கிராமப்புற கட்டமைப்பு மற்றும் சமூக சேவையில் கிரிஷ் பரத்வாஜ் ஆற்றிய மகத்தான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

Published : July 7, 2026 at 4:54 PM IST
தட்சிண கன்னடா: 'இந்தியாவின் பாலங்களின் மனிதர்' என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிஷ் பரத்வாஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 76.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மனைவி பெயர் உஷா பரத்வாஜ். இவர் கிரிஷ் பரத்வாஜ் காலமாவதற்கு முன்னரே இறந்துவிட்டார்.
கிரிஷ் பரத்வாஜ் - உஷா தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களது இரண்டு மகன்களும் பொறியியல் பட்டதாரிகள். இவரது மூத்த மகன் பதஞ்சலி பரத்வாஜ், தனது தந்தையின் வழியைப் பின்பற்றி அவரது பாலங்கள் கட்டும் பாரம்பரியத்தையும், 'ரேஷனல் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்' (Rational Engineering Works) நிறுவனத்தையும் தற்போது வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
கிரிஷ் பரத்வாஜ் 'பாலங்களின் மனிதர்' ஆனது எப்படி?
கிரிஷ் பரத்வாஜ் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி. சிவில் இன்ஜினியரிங் படிக்காத போதிலும், கிராமப்புற மக்களின் துயர் துடைக்க பாலங்களை வடிவமைக்க தொடங்கினார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு சுல்லியா அருகே உள்ள அரம்பூர் கிராம மக்கள், பாயஸ்வினி ஆற்றை கடக்க படும் அவதியைக் கண்டு, அவர்களது கூட்டு உழைப்புடன் (சிரமதான்) ரூ. 2 லட்சத்திற்குள் தனது முதல் தொங்கு பாலத்தை கட்டினார்.
கடந்த 3 தசாப்தங்களுக்கும் மேலாக தனது சேவையை தொடர்ந்த அவர் கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் தொலைதூரக் கிராமங்களில் 140-க்கும் மேற்பட்ட குறைந்த செலவிலான தொங்கு பாலங்களை கட்டியுள்ளார்.
வழக்கமான பாலங்களை விட 10 மடங்கு குறைவான செலவிலும், வெறும் 3 மாத கால அவகாசத்திலும் இவரது பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
தேசத்தின் அங்கீகாரம் மற்றும் விருதுகள்
கிராமப்புற கட்டமைப்பு மற்றும் சமூக சேவையில் கிரிஷ் பரத்வாஜ் ஆற்றிய மகத்தான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.
கிராமப்புற மக்கள் இவரை அன்போடு 'சுல்லியாவின் விஸ்வேஸ்வரய்யா' என்றும், 'சேது பந்து' என்றும் அழைத்தனர்.
'ತೂಗುಸೇತುವೆಗಳ ಸರದಾರ', ಪದ್ಮಶ್ರೀ ಪುರಸ್ಕೃತ ಡಾ. ಗಿರೀಶ್ ಭಾರದ್ವಾಜ್ ಅವರ ನಿಧನದ ಸುದ್ದಿ ತೀವ್ರ ಆಘಾತ ಉಂಟುಮಾಡಿದೆ. ಗ್ರಾಮೀಣ ಭಾರತದ ಸಂಪರ್ಕ ಕ್ರಾಂತಿಗೆ ತಮ್ಮದೇ ಆದ ಕೊಡುಗೆ ನೀಡಿದ್ದ ಅವರ ಅಗಲಿಕೆ ಇಡೀ ರಾಜ್ಯಕ್ಕೆ ತುಂಬಲಾರದ ನಷ್ಟ.
— DK Shivakumar (@DKShivakumar) July 7, 2026
ದೇಶದಾದ್ಯಂತ 140ಕ್ಕೂ ಹೆಚ್ಚು ತೂಗು ಸೇತುವೆಗಳನ್ನು ನಿರ್ಮಿಸಿದ್ದ ಭಾರದ್ವಾಜ್ ಅವರು, ಮೂಲಸೌಕರ್ಯ… pic.twitter.com/YGgjthCTKr
தலைவர்கள் இரங்கல்
பாலங்களின் மனிதர் கிரிஷ் பரத்வாஜ் மறைவுக்குக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். "கர்நாடக மாநிலம் ஒரு சிறந்த தொழில்நுட்ப தொலைநோக்கு சிந்தனையாளரை இழந்து விட்டது" என தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

