பல்வேறு மாநில நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் - விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து விசாரணை
நீதிமன்றங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் தீவிரமாகத் திரட்டி வருகின்றனர்.


Published : January 8, 2026 at 8:47 PM IST
பாட்னா/கட்டக்/சிம்லா/ராய்பூர்: பீகார், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதித்துறைப் பணிகள் இன்று முடங்கின.
பீகாரில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினர் என்று கூறிக்கொள்ளும் நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, பாட்னா, அராரியா, கயா, கிஷன்கஞ்ச் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நீதித்துறைப் பணிகள் இன்று முடங்கின. அங்கு காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சரியாக காலை 10:37 மணிக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வழியாக குறிப்பிட்ட பீகாரில் உள்ள நீதிமன்றங்களுக்கு அருண் குமார் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல, சத்தீஸ்கரில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கு காலை 10 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. முறையே, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன.
பீகார் நீதிமன்றங்களுக்கு அனுப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில், வளாகத்தில் மூன்று ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் (IED) வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் பிற்பகல் நேரத்திலேயே அவை வெடிக்கும் எனவும், அருண் குமார் எனும் அடையாளம் தெரியாத நபர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நிமிடங்களில், நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு பாட்னா நீதித்துறை பதிவாளர் கேட்டுக்கொண்டார்.
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பீகார் தலைநகர் பாட்னாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) கார்த்திகேய ஷர்மா, “வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் காலி செய்யப்பட்டு, வெடிபொருட்களைத் தேடிப் பார்த்தோம். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்ற வளாகங்களை இன்னும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த செய்தியை குறிப்பிட்ட அவர், “பீகாரில் இருந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழ்நாட்டின் உள்ளூர் மக்கள்தொகை கட்டமைப்பைப் பாதிக்கிறது. நீதிபதி அறையிலும் நீதிமன்ற வளாகத்திலும் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் ரகசியப் புலனாய்வுப் பிரிவான ஐஎஸ்ஐ உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டிருந்ததாக நம்மிடம் தெரிவித்தார்.
மேலும், “பீகார் சென்னைக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும். இன்றைய குண்டுவெடிப்பு அனைத்து தமிழர்களிடமிருந்தும் வரும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்,” என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிரட்டியவரை தேடும் காவல்துறை
மிரட்டல் மின்னஞ்சலைத் தொடர்ந்து, அனைத்து நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு வாட்ஸ்ஆப்பில் குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக பாட்னா மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் மங்கேஷ் தயால் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார். அதன் பின்னர், ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
ஒடிசா மாநிலத்தில் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, இந்த அச்சுறுத்தலைக் கவனத்தில் கொண்டு, உடனடியாக விசாரணையைத் தொடங்கி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள, மூன்று மூத்த காவல்துறை அதிகாரிகள் மாநிலத்தின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
| இதையும் படிங்க: இன்னும் 2 வாரத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை - அப்டேட் கொடுத்த அரசு |
இவ்வாறு பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு ஒரே நாளில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக அந்தந்த மாநில காவல்துறையினரும், தேசிய பாதுகாப்புப் படையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இதுவரை சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

