ஓஎன்ஜிசி தளத்தில் 2-வது நாளாக எரியும் தீ - தொடரும் தீயணைப்பு பணிகள்
தீ விபத்து ஏற்பட்ட தளமானது நேரடியாக ONGC நிறுவனத்தால் இயக்கப்படவில்லை எனவும், ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : January 6, 2026 at 5:48 PM IST
அமலாபுரம் (ஆந்திரப்பிரதேசம்): எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கு (ONGC) சொந்தமான தளத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து தீ எரிந்து வரும் நிலையில், நிபுணர்கள் குழு தீயை அணைக்க போராடி வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கொனசீமா மாவட்டத்தில் அமைந்துள்ள இருசுமண்டா கிராமத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தளம் உள்ளது. இங்கு நேற்று (ஜன 5) மதியம் 12:40 மணியளவில் திடீரென இயற்கை எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 20 மீட்டர் உயரம் மற்றும் 25 மீட்டர் அகலத்தில் பற்றியெரிந்த இந்த தீயானது அருகிலிருந்த தென்னந்தோப்புக்கும் பரவியதில் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சாம்பலாகின.
உயிரிழப்புகள் இல்லை
கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த ONGC தீயணைப்பு வீரர் குழுக்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், மும்பை மற்றும் டெல்லியிலிருந்தும் ONGC நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டது. தொடர் முயற்சிகளின் பலனாக தற்போது நெருப்பின் தீவிரம் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மோரி-5 என பெயரிடப்பட்ட எரிவாயு உற்பத்தி தளத்தில் தற்காலிகமாக உற்பத்தியானது நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த தளத்தில் நிபுணர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கச்சா கலந்த எரிவாயு கலன் திடீரென வெடித்தது.

இந்த தீ விபத்தால் இருசுமண்டா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கரும்புகை சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். இந்த தீ விபத்தின் காரணமாக 500-க்கும் மேற்பட்ட மக்களை அதிகாரிகள் மீட்டு முகாம்களில் தங்க வைத்திருக்கின்றனர். தீ விபத்து ஏற்பட்ட தளத்தின் சுற்றுப்பகுதிகளில் சுமார் 500 - 600 மீட்டர் தூரத்திற்கு மக்கள் யாரும் வசிக்காததால், இந்த விபத்தில் உயிரிழப்போ, யாருக்கும் தீக்காயங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| இதையும் படிங்க: 'திருப்பரங்குன்றம் தீர்ப்பு' - தமிழக அரசு மீண்டும் அரசியல் செய்யக் கூடாது என பியூஷ் கோயல் பேட்டி |
ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்த தளம்
மேலும் மோரி - 5 இயற்கை எரிவாயு உற்பத்தி தளமானது ONGC நிறுவனத்தால் நேரடியாக இயக்கப்படாமல், அகமதாபாத்தை சேர்ந்த டீப் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கொனசீமா இணை ஆட்சியர் டி நிசாந்தி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், பற்றியெரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் நீர்க்குடையை உருவாக்கியுள்ளனர். இருப்பினும் தீப்பிழம்புகள் வந்த வண்ணமே உள்ளன என்று கூறியுள்ளார்.
மேலும் தீப்பிழம்புகள் விரைவில் அணைக்கப்படும் என்றும், நிபுணர்கள் குழுவானது நிலைமையை ஆராய்ந்து பிறகு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் பணியில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள், ONGC குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் நிசாந்தி தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தை கொனசீமா மாவட்ட ஆட்சியர் மகேஷ் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராகுல் மீனா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த வெடி விபத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவில் உள்ள நிபுணர்களிடம் உதவி கேட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

