ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை; பாஜக - திரிணமூல் தொண்டர்கள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் இன்னும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழ்நிலையில், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை
மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2026 at 11:31 AM IST

2 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர் மோதலில் ஈடுபட்டு வருவதால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம், பாஜக 208 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.

மேலும், மம்தாவின் டிஎம்சி 80, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றன. இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "தான் ஒருபோதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். பாஜகவும், தேர்தல் ஆணையம் இணைந்து மோசடியில் வென்றுள்ளனர்" என்றும் குற்றச்சாட்டினார்.

இதனிடையே தேர்தல் முடிவு வெளியானது முதல் மேற்கு வங்கம் முழுவதும் தொடர் கலவரம் நிகழ்ந்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் ஒருவர் உயிரிழந்தனர்.

கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது டிஎம்சி தொண்டர்களால் தாக்கப்பட்டு பாஜகவை சேர்ந்த ஒரு தொண்டரும், டிஎம்சியை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகு மாநிலம் முழுவதும் தங்களின் தொண்டர்களின் மீது பாஜகவினர் தொடர் தாக்குதல் ஈடுபட்டு வருவதாக டிஎம்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்கள், பாஜகவின் அராஜகத்தை தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு அம்மாநில பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் பாஜகவின் மீது அபாண்ட குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதாகவும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே பாஜகவினரை தாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

போலீசார் மீது துப்பாக்கிச்சூடு

இதனிடையே, மேற்கு வங்கத்தின் நஜிம் பகுதியில் நடைபெற்ற மோதலை தடுக்கச்சென்ற காவலர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு காவலரின் காலில் குண்டு பாய்ந்தது. மற்றொரு காவலரும் படுகாமடைந்தார். இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இரண்டு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி பதட்டமான சூழ்நிலையை மேற்கு வங்கத்தில் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் இன்னும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழ்நிலையில், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாநில தலைமை செயலாளருக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.