தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல்: பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்டோரை நியமித்தது பாஜக
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதும் அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்தார்.

Published : December 15, 2025 at 1:28 PM IST
புதுடெல்லி: தமிழக பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் கடந்த சில மாதங்களாக தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் அருண் சிங் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
அதன்படி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக மூன்று மத்திய அமைச்சர்களை களமிறக்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த பியூஷ் கோயல்?
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிக்கல்களை தீர்க்கும் வல்லமை படைத்தவர் என்று பாஜகவினரால் பாராட்டப்படுபவர். எனவே இவரது நியமனம் தமிழக பாஜகவினரால் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதும் பியூஷ் கோயல் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனவே, தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர் நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி அங்கு பாஜக வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

பாஜகவின் திட்டம் என்ன?
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பொறுப்பை இந்த குழுவுக்கு பாஜக தலைமை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிமுகவில் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர இந்த குழுவினர் முயற்சி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே போன்று கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை பெற்று 4 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. எனவே இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், அதை நிறைவேற்றும் வகையில் வியூகங்களை வகுக்கும் பொறுப்பு இந்த குழுவினரிடம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக அதிமுகவிடம் இந்த குழுவினர் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

