ETV Bharat / bharat

பீகார் தோல்விக்கு என்ன காரணம்? காங். தலைவர்கள் விளக்கம்!

காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, வாக்குச்சாவடிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 5:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கனியை எட்டிப் பிடித்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகார் சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலை வகித்து வரும் நிலையில், மெகா கூட்டணி படுதோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த முறை 80 இடங்களில் வென்ற ஆர்ஜேடி, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 4 இடங்களில் மட்டும் தான் முன்னிலையை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், பீகாரில் தாங்கள் தோல்வியுற பாஜகவும், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் EVMஇல் செய்யப்பட்ட குளறுபடிகளே காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது ஞானேஷ்குமாரின் வெற்றி - பவன் கேரா, காங்கிரஸ் தலைவர்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “பீகார் மக்கள் மீது ஞானேஷ் குமார் குப்தா ஆதிக்கம் செலுத்தி வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. பீகார் மக்கள் வெற்றி பெறுவார்களா அல்லது ஞானேஷ் குமார் வெற்றி பெறுவாரா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்” என்று தெரிவித்தார்.

நான் சந்தேகித்ததே நடந்தது - மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்

“நான் சந்தேகித்தது நடந்துவிட்டது. 62 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு, 10 லட்சம் வாக்குகள் சேர்க்கப்பட்டன. அவற்றில் 5,00,000 வாக்குகள் SIR படிவத்தை நிரப்பாமல் சேர்க்கப்பட்டன. பெரும்பாலான ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர்களின் வாக்குகள் நீக்கப்பட்டன. மேலும், EVM பற்றிய சந்தேகங்களும் எழுந்துள்ளன. காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, வாக்குச் சாவடிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

வாக்கு திருட்டை எப்படி தடுப்பது? - ஜிது பட்வாரி, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்

"இந்த நாட்டில் ஜனநாயகம் எப்படி நிலைத்திருக்கும் என்பது பற்றி தொடர்ந்து பேச வேண்டியுள்ளது. வாக்கு திருட்டை எப்படி தடுப்பது? என்ற கருத்தை உருவாக்கி, தேர்தல் நேரத்தில் வாக்குகளை திருடும் வேலையைத் தான் பாஜக, நரேந்திர மோடி மற்றும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறார்கள். உண்மையில் இந்த ஜனநாயகத்தை காப்பாற்றுவது பற்றி கவலை ஏற்பட்டுள்ளது” என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி வாக்கு திருட்டு பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க:

1. ஒரு முறை கூட எம்எல்ஏ ஆகாமல் 10-வது முறையாக முதல்வர் பதவி? நிதிஷ் எனும் ராஜதந்திரி!

2. வரலாறு படைத்த பாஜக கூட்டணி: உற்சாக மோடில் ஜேடியூ தொண்டர்கள்... வெறிச்சோடிய ஆர்ஜேடி அலுவலகம்!

3. தகர்ந்தது கனவு: பெரும் சறுக்கலை சந்தித்த லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ்!

தேர்தல் ஆணையமே ஆதரவளிக்கிறது - அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர்

“நியாயமானன தேர்தல்கள் இல்லையென்றால் அதற்கு பெயர் வாக்கு திருட்டு. இப்போது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. ஹரியானா, மகாராஷ்டிராவுக்கு பிறகு பீகாரில் இந்த சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பண பலத்தை பயன்படுத்திய விதம் கற்பனை செய்ய முடியாதது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது. தேர்தலின் போது 13.5 மில்லியன் பெண்கள் தங்கள் கணக்குகளில் தலா ரூ. 10 ஆயிரம் பெற்றனர். தேர்தல் ஆணையத்திற்கு என்ன ஆயிற்று? தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ராஜஸ்தானில் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. ஆனால் பீகாரில் எல்லாமே தொடர்ந்தது” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.