ETV Bharat / bharat

குழந்தைகளை வாஷிங் மெஷினில் அடைத்து, கழிவறையில் பூட்டிய ஊழியர்கள் - அடுத்தடுத்து வெளியாகும் 'அதிர்ச்சி' தகவல்கள்

குழந்தைகளை கழிவறைக்கு கூட்டிச் சென்று, அங்குள்ள டாய்லெட் ஜெட் ஸ்ப்ரே மூலம் குழந்தைகளின் வாயில் நேரடியாக தண்ணீரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

பிரதிநிதித்துவப்படம்
பெண் ஊழியர் ஒருவர் குழந்தையை சித்ரவதை செய்த காட்சி (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 2, 2026 at 7:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat

பெங்களூரு: ஐடி நிறுவன வளாகத்தில் குழந்தைகள் வாஷிங் மெஷினில் அடைக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், அதனை வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய பெண் ஊழியரை டே கேர் நிர்வாகம் பழிவாங்கும் நோக்கில் வேலையை விட்டு நீக்கிய அதிர்ச்சித் தகவல் இன்று போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.

பெங்களூரு எச்.ஏ.எல் காவல் எல்லைக்குட்பட்ட புரூக்ஃபீல்டு பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவன வளாகத்திற்குள், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்காக பகல் நேர பராமரிப்பு மையம் செயல்பட்டு வந்தது. இங்கு 2 முதல் 3 வயதுக்குட்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் அங்கிருந்த பெண் ஊழியர்களால் மிகக் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த மையத்தில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டு இருந்தாலோ அல்லது அடம் பிடித்தாலோ, அவர்களை அமைதிப்படுத்த ஊழியர்கள் கையாண்ட வழிமுறைகள் பார்ப்போரை நெஞ்சம் பதற வைத்துள்ளது.

குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினின் டிரம்மிற்குள் அமர வைத்துப் பூட்டியுள்ளனர். கழிவறைக்கு கூட்டிச் சென்று, அங்குள்ள டாய்லெட் ஜெட் ஸ்ப்ரே மூலம் குழந்தைகளின் வாயில் நேரடியாக தண்ணீரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் குழந்தைகளை கழிவறைக்குள் தனியாக பூட்டி வைப்பது, அடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் அண்மையில் வாட்ஸ்-ஆப் குழுக்களில் வெளியாகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு புகாராக சென்றது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் சட்ட அலுவலர் திலகேஷ் குமார் அளித்த புகாரின்பேரில், எச்.ஏ.எல் நகரப் போலீசார் மஞ்சுளா, விஜயலட்சுமி, பவானி, சிந்து மற்றும் பிந்து ஆகிய 5 பெண் பராமரிப்பாளர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 351(2) மற்றும் சிறுவர் நீதி சட்டம் பிரிவு 75-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் காட்டுத்தீ போலப் பரவி பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, நிறுவனம் அந்த டே கேர் மையத்தை தற்காலிகமாக மூடி உத்தரவிட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த கொடுமை குறித்து முன்னதாகவே காப்பகத்தின் மேற்பார்வையாளரிடம் புகார் அளித்த பெண் ஊழியர், டே கேர் நிர்வாகத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டது போலீசார் இன்று நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்தும் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் தனி விசாரணை நடத்தி வருகிறது.

ஐடி ஊழியர்கள் தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நம்பி விட்டுச் செல்லும் கார்ப்பரேட் வளாகத்தின் உள்ளேயே இத்தகைய கொடூரம் நடந்துள்ளது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.