ETV Bharat / bharat

செல்லப் பூனைக்கு வளைகாப்பு: சீர்வரிசையுடன் வந்து வாழ்த்திய மக்கள்

செல்லப் பிராணியாக இருக்கும் ஜிஞ்சுவின் வளைகாப்பில் ஒட்டுமொத்த கிராம மக்களும் கலந்து கொண்டு, அதற்கு பிடித்த உணவு வகைகளுடன், பூ, பழம் காய்கறிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பூனைக்கு வளைகாப்பு
பூனைக்கு வளைகாப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 2:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுச்சேரி: திருக்கனூர் பகுதியில் பூனைக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

திருக்கனூர் அருகே உள்ள கொ.மணவெளி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் ரூபி தம்பதியர். இவர்கள் தங்கள் வீட்டில் ஜிஞ்சு என்ற பெயரில் பெண் பூனை ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்த பூனை அவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த தெருவில் இருப்பவர்களுக்கும் செல்லப் பிராணியாக மாறியது.

தெருவில் இருக்கும் குழந்தைகளின் வீட்டிற்கு அடிக்கடி ஜிஞ்சு செல்வதும், அதனுடன் அவர்கள் விளையாடுவதும் வாடிக்கையாகியுள்ளது. அப்படி அவர்கள் விளையாடும் போது, குழந்தைகளின் குடும்பத்தினர் சொல்வதை கேட்டு பூனை, அதன்படியே நடக்கும் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜிஞ்சுவின் மீது மிகவும் பிரியத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒன்றரை வயதான ஜிஞ்சு பூனை கர்ப்பமானது. இதனால் அப்பகுதி மக்கள் அதற்கு வளைகாப்பு செய்வது என முடிவெடுத்தனர். இதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகேயன் - ரூபி தம்பதியினரும் வளைகாப்புக்கான ஏற்பாடுகளை தங்களது வீட்டில் செய்திருந்தனர்.

பூனைக்கு வளைகாப்பு செய்யும் பொதுமக்கள் (ETV Bharat Tamil Nadu)

இதனைத் தொடர்ந்து, வீட்டினை அலங்கரித்து, ஜிஞ்சுக்கு தனியாக சேர் போட்டு அதனை அமர வைத்தனர். அவர்கள் வசிக்கும் முருகன் கோயில் தெரு மட்டுமல்லாது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற வீதிகளில் உள்ள பொதுமக்களும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி பெண் பூனை ஜிஞ்சுவிற்கு மிகவும் பிடித்த உணவுகளான மீன், இறா, சிக்கன், முட்டை, தயிர் சாதம், பால் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளையும் செய்து விழாவிற்கு கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதி பெண்கள் பூ, வளையல், வாழைப்பழம், பலாப்பழம், அவித்த காய்கறிகள் உள்ளிட்டவற்றை தட்டு வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், விழாவிற்கு வந்த கிராம மக்கள் ஜிஞ்சுக்கு பூ, பொட்டு, சந்தனம், குங்குமம் ஆகியவை வைத்து நலங்கு வைத்தனர்.

இதையும் படிங்க: உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்; திண்டுக்கல் அருகே வினோதம்

பின்னர் ஆரத்தி எடுத்தும் மகிழ்ந்தனர். புளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்ட கலவை சாதம் வகைகளையும் செய்து வைத்து படைத்தனர். பொதுமக்கள் மட்டுமல்லாது, கார்த்திகேயன் தம்பதியினரின் உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அத்தம்பதியினர், பிளாஸ்டிக் டப்பாக்களை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.