தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியல்; அசாமில் அதிரடி காட்டும் காங்கிரஸ்
வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய தினம் வரை காங்கிரஸ் தலைமை வேட்பாளர் அறிவிப்பை தள்ளிப்போட்ட காலம் மாறி, தற்போது தேர்தலுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published : March 3, 2026 at 9:42 PM IST
புதுதில்லி: அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான 42 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
விரைவில் தமிழ்நாடு,மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அடுத்த சில நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் கூட்டணி கட்சியினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாரகள். இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், நாளை கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில், முதற்கட்டமாக 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய தினம் வரை காங்கிரஸ் தலைமை வேட்பாளர் அறிவிப்பை தள்ளிப்போட்ட காலம் மாறி, தற்போது தேர்தலுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய வேட்பாளர்கள்
- கவுரவ் கோகோய் - ஜோர்ஹாட் தொகுதி
- தேபப்ரதா சாய்கியா - நசிரா தொகுதி
- ரிபுன் போரா - பர்சல்லா தொகுதி

