பீகாரை அதிர வைத்த அசாதுதீன் ஒவைசி: தனித்து களம் கண்டு 5 தொகுதிகளில் மாஸ் வெற்றி!
மஜ்லீஸ் கட்சியை மகா கூட்டணி சேர்த்திருந்தால், ஒட்டுமொத்த பீகாரில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளும் அந்தக் கூட்டணிக்கு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது பாஜகவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறி, மகா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டன.

Published : November 14, 2025 at 8:19 PM IST
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, 5 தொகுதிகளில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஒருவேளை, ஆர்ஜேடி - காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி, சில சமரசங்களை செய்து மஜ்லிஸ் கட்சியை சேர்த்திருந்தால் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடையவுள்ளது. இரவு 7.30 மணி நிலவரப்படி 199 தொகுதிகளில் ஜேடியு - பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதே சமயத்தில், ஆர்ஜேடி - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி வெறும் 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வது உறுதியாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்க, பீகாரில் தனித்து களம் கண்ட ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. மற்றொரு தொகுதியிலும் வெற்றிக் கனியை பறிக்கவுள்ளது. சீமாஞ்சல் பிராந்தியத்தில் 14 இடங்களில் நின்ற மஜ்லீஸ் கட்சி வேட்பாளர்கள் 5 இடங்களை வசப்படுத்தியுள்ளனர்.
யாருடைய தயவும் இன்றி, தனித்து களம் காணும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கட்சி, இத்தகைய வெற்றி பெறுவது அசாதாரண விஷயம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
இதற்கு முன்பு, கடந்த 2015-இல் முதன்முறையாக பீகார் தேர்தல் களத்திற்குள் நுழைந்த மஜ்லீஸ் கட்சி, கிஷன்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு, 2020 சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், 2022-இல் அந்த 5 எம்எல்ஏக்களில் 4 பேர் ஆர்ஜேடிக்கு தாவி, ஒவைசிக்கு பேரதிர்ச்சியை கொடுத்தனர்.
இந்நிலையில்தான், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளார் அசாதுதீன் ஒவைசி. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மகா கூட்டணியில் சேரவே ஒவைசி ஆரம்பத்தில் இருந்து ஆர்வம் காட்டினார். ஆனால், அவர் கேட்ட 6 தொகுதிகளை கொடுக்க ஆர்ஜேடி முன்வரவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஒவைசி, தனது வேட்பாளர்களை தனித்து போட்டியிட செய்தார். சீமாஞ்சல் பிராந்தியத்தில் 47% இஸ்லாமியர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 24 தொகுதிகளில் இஸ்லாமியர்கள் வாக்குகள்தான் அங்கு அதிகம்.
ஒருவேளை, ஒவைசியின் மஜ்லீஸ் கட்சியை மகா கூட்டணி சேர்த்திருந்தால், சீமாஞ்சல் மட்டுமின்றி ஒட்டுமொத்த பீகாரில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளும் அந்தக் கூட்டணிக்கு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது பாஜகவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கு சிதறி, மகா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன. யாதவர்களின் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் மகா கூட்டணியின் பலம் என தெரிந்திருந்தும், வலிய வந்து நின்ற வாய்ப்பை மகா கூட்டணி தவறவிட்டுவிட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

