ETV Bharat / bharat

'ஈரானுக்கு துணை நிற்போம்' தேசிய மாநாடு கட்சி உறுதி

காமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் ஸ்ரீநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 3:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

காஷ்மீர்: காமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் ஸ்ரீநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த பிப்.28- ஆம் தேதி ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா சையது அலி காமேனி, அமெரிக்கா-இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது மனைவி, மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ஈரான் நாட்டின் இராணுவ தளபதி, உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட 48 முக்கிய பிரமுகர்கள் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தனர். இதையடுத்து, துபாய், ஷார்ஜா, சவூதி, குவைத், ஷார்ஜா போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடங்கள் மற்றும் அமெரிக்க இராணுவ தளவாடங்கள், கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. அதேபோல் இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால் வளைகுடா நாடுகளில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா சையது அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து, மார்ச் 02- ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த முழு கடையடைப்பிற்கு முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆதரவு தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரான் போர்: கடுமையாக உயரும் கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருள்கள் விலையேறும் அபாயம்

இதனிடையே, ஈரான் உச்ச தலைவர் காமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் ஸ்ரீநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாகாண தலைவர் ஷோகட் அகமத் மிர் மற்றும் கட்சியின் தேசிய செயலாளர் அலி முகமது சாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய தலைவர்கள், "அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான நேரத்தில் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அவர்களுக்கு தைரியத்தை தர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம். எங்களது கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக ஈரான் நாட்டு மக்களுடன் துணை நிற்கின்றனர். ஈரான் பள்ளி மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பள்ளி குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியையும், கவலையும் அளிக்கின்றது. அவர்களுக்கு எங்களது ஆழந்த இரங்கல்" எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் வகையில் உள்ளூர் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.