தீ விபத்தில் சிக்கியவரை சுமந்து சென்ற 'ஆம்புலன்ஸ் விமானம்' விழுந்து விபத்து: 7 பேர் பலி
விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் இரவு 7.30 மணியளவில் காணாமல் போன நிலையில், சிமாரியாவில் உள்ள பரியாட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

Published : February 24, 2026 at 9:02 AM IST
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி சென்ற விமான ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள சந்த்வாவை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (41). கடந்த 16 ஆம் தேதி அவர் தீ விபத்தில் சிக்கிய நிலையில், 65 சதவீத தீக்காயங்களுடன் ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினர் மேல்சிகிச்சைக்காக அவரை டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக, தனியார் விமான சேவை நிறுவனமான ரெட்பேர்ட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள், பீச்கிராஃப்ட் சி90 என்ற சிறிய ரக விமான ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துள்ளனர். அதனையடுத்து, நேற்று (பிப்.23) மாலை சஞ்சய் குமாரை டெல்லிக்கு கொண்டு செல்ல திட்டமிட்ட நிலையில், ராஞ்சி விமான நிலையத்திலிருந்து இரவு 7.11 மணிக்கு விமான ஆம்புலன்ஸ் புறப்பட்டுள்ளது.

அதில், கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், சஞ்சய் குமார், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார் ஆகிய 7 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானம் திடீரென காணாமல் போனது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜார்க்கண்ட் மாநிலம் சிமாரியாவில் உள்ள பரியாட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி இருப்பது தெரிய வந்தது. விமானத்தில் இருந்த சஞ்சய் குமார், 2 பணியாளர்கள் உட்பட 7 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.
| இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் இரட்டை கொலை: பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி உட்பட இருவருக்கு நேர்ந்த விபரீதம் |
இந்த விமான ஆம்புலன்ஸ் விபத்து குறித்து ராஞ்சி விமான நிலைய இயக்குநர் வினோத் குமார் கூறுகையில், “இரவு 7.11 மணிக்கு விமான ஆம்புலன்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பிறகு விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது. அதன் பின்னர் சிமாரியாவில் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
மோசமான வானிலை இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், உண்மையான காரணம் என்னவென்று விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும்” என்றார்.
விபத்து குறித்து விமான போக்குவரத்து தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் ராஞ்சியிலிருந்து இந்திய நேரப்படி 07:11 மணிக்கு புறப்பட்டது. 07.34 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்துடன் தொடர்பு கொடுக்கப்பட்ட நிலையில் வாரணாசியிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் ரேடார் கட்டுப்பாட்டை இழந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. டெல்லியைச் சேர்ந்த ரெட்பேர்டு விமான நிறுவனத்தின் கீழ் விபத்துக்குள்ளான விமானம் உட்பட 6 விமானங்களை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

