ETV Bharat / bharat

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றமற்றவர் - டெல்லி நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி என்ன?

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா குற்றவாளிகள் அல்ல என்பது ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 11:46 AM IST

4 Min Read
Choose ETV Bharat

டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை விடுவித்து ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 27) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் மதுபானக் கொள்கையில் சதி நடந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மணீஷ் சிசோடியா தரப்பில் எந்தவொரு ‘குற்ற நோக்கமும்’ இருந்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

அத்துடன், “ஒரு முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் அரசு முடிவுகளை, போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் ‘சதித் திட்டம்’ என்று முத்திரை குத்திவிட முடியாது,” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் முன்வைத்த 3 முக்கிய கருத்துகள்

சதி திட்டம்: மதுபானக் கொள்கையை உருவாக்குவது என்பது ஒரு அரசாங்கத்தின் நிர்வாக முடிவு. மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இந்தக் கொள்கை மாற்றத்தையே ஒரு சதித் திட்டம் என்று கூறியது. ஆனால், நீதிபதி இதை மறுத்து, “அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் அனைத்தும் ஒரு அரசியலமைப்பு அதிகாரத்தால் எடுக்கப்படுபவை. ஒரு கொள்கை பிடிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது அதில் குறைபாடுகள் இருப்பதாலோ மட்டும் அதை ‘சதி திட்டம் தீட்டுவது’ என்று சொல்ல முடியாது” என்றார்.

ஆதாரங்கள்: ஒரு பெரிய பதவியில் இருப்பவர் மீது சதி குற்றம் சுமத்த வேண்டுமென்றால், அதற்கு மிக வலுவான ஆதாரங்கள் தேவை. வெறும் யூகங்களின் அடிப்படையில் ஒரு அரசியலமைப்பு பதவியில் இருப்பவரை குற்றவாளியாக்க முடியாது. சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளில் இதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்ற நோக்கம்: சட்டம் ஒருவரைத் தண்டிக்க வேண்டுமென்றால், அவரிடம் ‘குற்ற நோக்கம்’ இருந்திருக்க வேண்டும். மணீஷ் சிசோடியா தரப்பில் அப்படி எந்த ஒரு தனிப்பட்ட லாபத்திற்காகவோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ செயல்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிபதி கூறினார்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை, போதிய சான்றுகள் இல்லாமல் ‘இது ஒரு சதி திட்டம்’ என்று அழைப்பது சட்டப்படி செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி கொண்டாட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா ஆகியோரை நிரபராதி என டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்பளித்துள்ளது, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் தீர்ப்பைக் கொண்டாடும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இந்த உலகில் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக மாறினாலும், ‘சிவ சக்திக்கு’ மேலாக யாரும் உயர முடியாது. உண்மை எப்போதும் வெல்லும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

தாங்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் கண்ணீர் ததும்ப செய்தியாளர்களை சந்தித்து மகிழ்ச்சியை பதிவு செய்தனர்.

மதுபானக் கொள்கை வழக்கின் பின்னணி

டெல்லி அரசு 2021 நவம்பரில் ஒரு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன்படி, அரசு மதுக்கடைகள் மூடப்பட்டு, அனைத்துக் கடைகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும், மதுபான மாஃபியாக்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் ஆம் ஆத்மி அரசு நம்பிக்கை தெரிவித்தது. ஆனால், இந்த கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், 2022 ஜூலையில் புதிய மதுபானக் கொள்கை ரத்து செய்யப்பட்டது.

இந்தக் கொள்கையை தங்களுக்குச் சாதகமாக மாற்ற ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும் கொண்ட ‘தென்னிந்திய லாபி’ (South Lobby), ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியது.

இதில் கிடைத்த பணத்தை கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்தது. மதுபான விநியோகஸ்தர்களுக்கான லாப வரம்பை 5-இல் இருந்து, 12 விழுக்காடாக உயர்த்தியதுதான் இந்த வழக்கின் மையப்புள்ளியாகப் பார்க்கப்பட்டது. இந்த 12 விழுக்காட்டில் 6 விழுக்காடு லஞ்சமாகத் திரும்பப் பெறப்பட்டது என்பது சிபிஐ-யின் உச்ச வாதமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து சிபிஐ 2022-இல் முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதன் பிறகு பல கூடுதல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் முதல் மூன்று குற்றப்பத்திரிகைகளில் இடம்பெறவில்லை என்றாலும், நான்காவது கூடுதல் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

வழக்கின் முக்கியப் புள்ளிகள்

இந்த வழக்கில் பி.சரத் சந்திர ரெட்டி, ராகவ் மகுண்டா போன்றவர்கள், மன்னிப்புச் சாட்சிகள் ஆக மாறி அளித்த வாக்குமூலங்களே கெஜ்ரிவாலுக்கு எதிரான முக்கிய ஆதாரங்களாக சிபிஐ தரப்பால் முன்வைக்கப்பட்டன. அவை ஒரு உயர்நிலை அதிகாரத்தில் உள்ள நபருக்கு போதாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக, டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில், 23 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றம் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவை விடுவித்த நிலையில், அவர்களும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில், பிணையில் வெளியே உள்ள கே. கவிதா (பிஆர்எஸ் கட்சியின் தலைவர்), விஜய் நாயர் (ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர்), துர்கேஷ் (ஆம் ஆத்மி எம்.எல்.ஏ) ஆகியோர் முக்கிய முகங்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: சுயமாக சிந்தித்துதான் திமுகவில் இணைந்தேன் - ஓபிஎஸ் ஓபன் டாக்

மேலும், மன்னிப்பு சாட்சிகளாக மாறியவர்களில், ராகவ் மகுண்டா (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மகுண்டா சீனிவாசுலு ரெட்டியின் மகன்), பி. சரத் சந்திர ரெட்டி (அரபிந்தோ ஃபார்மா நிறுவனத்தின் இயக்குநர்), புச்சிபாபு கோரண்ட்லா (கவிதாவின் முன்னாள் கணக்காளர்) ஆகியோர் இந்த வழக்கின் முக்கியப் புள்ளிகளாக உள்ளனர்.

அடுத்தகட்டம் என்ன?

இந்நிலையில், சிபிஐ முன்வைத்துள்ள சதித்திட்ட செயல் என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. அதில் இருந்து முக்கியமான தலைவர்கள் விடுவிக்கப்படும்போது, அந்த சங்கிலி உடைந்துவிடும் என்றே சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். தற்போது, ‘தென்னிந்திய லாபி’ லஞ்சம் கொடுத்தது உண்மை என்றால், அதை வாங்கியவர்கள் யார் என்ற கேள்விக்கு சிபிஐ பதில் சொல்லியாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் சதித் திட்டத்தில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால், இந்த வழக்கில் உள்ள மற்ற 21 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.