ETV Bharat / bharat

டெல்லி கலவர வழக்கு: முகமது காலித், சர்ஜீல் இமாம் ஜாமீன் மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்ஃபிஷா பாத்திமா, முகமது சலீம் கான் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

செயற்பாட்டாளர்கள் உமர் காலித் (வலது), சர்ஜீல் இமாம் (இடது)
உமர் காலித் (வலது), சர்ஜீல் இமாம் (இடது) (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 2:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களும், முன்னாள் மாணவர்களுமான உமர் காலித், சர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த இருவரின் மீதான குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குல்ஃபிஷா பாத்திமா, மீரா ஹைதர், ஹிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், சதாப் அகமது ஆகிய ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆராயும் போது, மனுதாரர்களுக்கு (முகமது காலித் மற்றும் சர்ஜீல் இமாம்) இந்த சம்பவத்தில் உள்ள முக்கியப் பங்கு தெளிவாக தெரிகிறது. அதாவது இந்தச் சம்பவத்துக்கு திட்டம் தீட்டியது, ஆட்களை சேர்த்தது மற்றும் அவர்களை வழி நடத்தியது என்று மனுதாரர்கள் மீது வலுவான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய நிலையில் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பை மீறுவதாக இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

தங்களுக்கான சட்ட வழிமுறைகளை பின் பற்றி மனுதாரர்கள் ஜாமீன் கோரி உள்ளனர். ஆனால் இந்த வழக்கின் தற்போதைய விசாரணை நிலையை காரணம் காட்டி அவர்கள் ஜாமீன் கோருவதை நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மனுதாரருக்கும் இந்த குற்றச் சம்பவத்தில் உள்ள பங்கை கருத்தில் கொண்டு தான் அவர்களின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தனிமனித சுதந்திரம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தேசத்தின் பாதுகாப்பும் பொது அமைதியும் முக்கியம் என்று நீதிபதி அரவிந்த் குமார் தீர்ப்பின் போது குறிப்பிட்டார். அதே சமயம் ஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்படுவதும் கவலைக்குரிய விஷயம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, வடகிழக்கு டெல்லியில் கடந்த 2020 பிப்ரவரியில் போராட்டங்கள் வெடித்தன. வன்முறையாக மாறிய இந்தப் போராட்டத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: ஆரவல்லி மலைத் தொடர்; மறுவரையறை குறித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கலவரம் தொடர்பாக செயற்பாட்டாளர்களும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களுமான உமர் காலித், ஹர்ஜீல் இமாம் உள்ளிட்ட 15 பேர் மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) வழக்குப்பதிவு செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நிீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. பல கட்டங்களாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, முகமது காலித் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க டெல்லி காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த கலவரம் தற்செயலாக நிகழ்த்தப்பட்டதல்ல என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் டெல்லி காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

டெல்லி கலவரத்துக்கு முன்பே, 2020 ஜனவரி 28-ம் தேதி சர்ஜீல் இமாம் கைது செய்யப்பட்டார். அவரது உரைகள் மட்டுமே கலவரத்துக்கு முழு காரணம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி தெரிவித்திருந்தனர்.